சென்னை, ஜன. 4:
புற்றுநோய் போன்றவற்றுக்கும் சித்த மருத்துவ முறையில் தீர்வு இருப்பதால், அவற்றை கண்டறிந்து சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும் என ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
‘குணப்படுத்த முடியாததாக கருதப்படும் நோய்களுக்கான தீர்வுகளைக் கண்டறிய சித்த மருத்துவத்தில் அறிவியல் ஆராய்ச்சியை மேற்கொள்ள இளம் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்’ என்று துணை ஜனாதிபதி கூறினார்.
சித்த மருத்துவத்தின் தந்தை என போற்றப்படும் அகத்தியரின் பிறந்த தினத்தையொட்டி ஆண்டுதோறும் சித்தா தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், மத்திய ஆயுஷ் அமைச்சகத்தால், சென்னை கலைவாணர் கலையரங்கத்தில் ‘உலகளாவிய ஆரோக்கியத்திற்கான சித்தா’ என்ற கருப்பொருளில் 9-ம் ஆண்டு சித்தா தின விழா நேற்று நடந்தது.
விழாவிற்கு மத்திய ஆயுஷ் அமைச்சக இணை அமைச்சர்(தனிப்பொறுப்பு) பிரதாப்ராவ் ஜாதவ் தலைமை தாங்கினார். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி, சிறந்த மருத்துவ சேவை அளிப்பவர்களுக்கு விருதுகளை வழங்கி பேசியதாவது:-
ஆயுஷ் குடையின் கீழ் உள்ள சித்தா, ஆயுர்வேதம், யுனானி மற்றும் யோகா போன்ற பாரம்பரிய சுகாதார அமைப்புகள் கடந்த காலத்தின் நினைவுச்சின்னங்கள் அல்ல, மாறாக கோடிக்கணக்கான மக்களின் நல்வாழ்வுக்கு தொடர்ந்து பங்களிக்கும் மருத்துவ முறையாகும்.
உடல், மனம் மற்றும் இயற்கைக்கு இடையிலான நல்லிணக்கத்தை வலியுறுத்தும் சித்த மருத்துவம், சுகாதாரம், தடுப்பு பராமரிப்பு மற்றும் வாழ்க்கை முறையை மேம்படுத்துகிறது. இது வாழ்க்கை முறை கோளாறுகள், மன அழுத்தம் மற்றும் சுற்றுச்சூழல் சவால்கள் நிறைந்த ஒரு சகாப்தத்திற்கு மிகவும் பொருத்தமானது.
சித்த மருத்துவம் நோய்களுக்கான மூல காரணங்களை நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்துகிறது. இந்த அமைப்பு அதன் விரிவான மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறை மூலம் முழுமையான சிகிச்சை மற்றும் மீட்புக்கான நம்பிக்கையை வழங்குகிறது.
ஆராய்ச்சியாளர்கள், பயிற்சி யாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சித்த அறிவை ஆவணப்படுத்தவும், நவீனப்படுத்தவும், உலகளவில் பகிர்ந்து கொள்ளவும் ஒத்துழைக்க வேண்டும். அதேநேரத்தில் அதன் பாரம்பரிய அறிவு, நெறிமுறை மற்றும் தத்துவ அடித்தளங்களைப் பாதுகாக்கவும் வேண்டும்.
குணப்படுத்த முடியாததாக கருதப்படும் நோய்களுக்கான தீர்வுகளைக் கண்டறிய சித்த மருத்துவத்தில் அறிவியல் ஆராய்ச்சியை மேற்கொள்ளுமாறு இளம் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு மருத்துவ முறைக்கும் அதன் சொந்த பலங்களும் நன்மைகளும் உள்ளன. மனிதகுலத்தின் நலனுக்காக அவற்றின் பலங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அனைத்து மருத்துவ முறைகளுக்கும் நேர்மறையான மற்றும் உள்ளடக்கிய அணுகுமுறையை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான, மிகவும் சீரான மற்றும் நிலையான சமூகத்தை உருவாக்க பாரம்பரிய ஞானத்தை நவீன அறிவியலுடன் ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய இணை அமைச்சர்
பிரதாப்ராவ் ஜாதவ்
மத்திய ஆயுஷ் அமைச்சக இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் பேசியதாவது:
பிரதமர் மோடியின் ஆட்சியில், பாரம்பரிய மருத்துவத்திற்கு தனி ஆயுஷ் அமைச்சகம் உருவாக்கப் பட்டது. சித்த மருத்துவ முறை, உலக அளவில் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.
மேலும், ஒருங்கிணைந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வகையில், தேசிய சித்த நிறுவனம், 50 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துள்ளது. ஆராய்ச்சி தான், மருத்துவத்திற்கு முதுகெலும்பு.
இவ்வாறு அவர் பேசினார்.
மா.சுப்பிரமணியன்
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
அச்சுறுத்தி வரும் புற்றுநோய்க்கு, சென்னை மற்றும் பாளையங்கோட்டை சித்த மருத்துவமனைகளில் சிறப்பு பிரிவு துவக்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
சித்த மருத்துவத்தை வலுப்படுத்த, மத்திய–மாநில அரசுகளின் கூட்டு பொறுப்பு முக்கியமானது. தமிழகத்தில், 7 அரசு கல்லூரிகள் உட்பட 55 ஆயுஷ் மருத்துவ கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. கடந்த 2024–25ம் ஆண்டில், 3.65 கோடி பேர் சித்த மருத்துவத்தில் பயன்பெற்றுள்ளனர். தினசரி ஒரு லட்சம் பேர் பயன்பெறுகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக துணை ஜனாதிபதி, சித்த கையெழுத்துப் பிரதிகள், புத்தகங்கள், மூலப்பொருட்கள் மற்றும் மூலிகை மருந்துகளின் பரந்த தொகுப்புகள் அடங்கிய கண்காட்சியை பார்வை யிட்டார். விழாவில், ஆயுஷ் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் மோனலிசா தாஷ், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ப.செந்தில்குமார், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை கமிஷனர் எம்.விஜயலட்சுமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள், சித்த மருத்துவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
![]()





