சிதம்பரம், ஜன. 2–
சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் டிசம்பர் 25-ம் தேதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் முக்கிய திருவிழாவான தேர் திருவிழா இன்று நடைபெற்றது. நாளை மார்கழி ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது.
உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசனமும் ஆகிய இரு திருவிழாக்கள் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு வருகிற டிசம்பர் 25–ம் தேதி வியாழக்கிழமை மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து 26–ந் தேதி வெள்ளி சந்திர பிரபை வாகன வீதிஉலா, 27–ந் தேதி தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலா, 28–ந் தேதி வெள்ளி பூத வாகனத்தில் வீதி உலா, 29–ந் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் வீதி உலாவும், 30-ம் தேதி வெள்ளி யானை வாகன வீதிஉலாவும், 31-ம் தேதி தங்க கைலாச வாகன வீதி உலாவும் நடைபெற்றது. நேற்று ஜனவரி 1–ந் தேதி தங்க ரதத்தில் சோமாஸ்கந்தர் வெட்டுக்குதிரையில் வீதிஉலாவும் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து முக்கிய திருவிழாவான தேர்த்திருவிழா முன்னிட்டு இன்று அதிகாலை ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜபெருமான் சித் சபையில் இருந்து புறப்பட்டு மேளதாளம் முழங்க கீழ ரத வீதியில் உள்ள தேர்நிலைக்கு வந்தடைந்தனர். பின்னர் நடராஜர், சிவகாமசுந்தரி அம்மன், விநாயகர்,முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் தனித்தனி தேர்தலில் வீற்றிருக்க தேர் நிலையான கீழரதவீதியில் இருந்து சுமார் 9 மணி அளவில் சிவ கோஷத்துடன் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர், தேரானது கீழதரவீதி, தெற்கு ரத வீதி, மேலரதவீதி, வடக்குரத வீதி வழியாக மீண்டும் இன்று மாலை 6 மணி அளவில் தேர் நிலையான கீழரத வீதி வந்தடையும், தேர் திருவிழா முன்னிட்டு தில்லை திருமுறை கழகம் சார்பில் ஏராளமான பக்தர்கள் தேவாரம் திருவாசகம் பாடி தேர் முன் சென்றனர், பெண் பக்தர்கள் நடராஜர் தேர் முன்பு கோலமிட்டும், மேளதாளங்களுக்கு நடனமாடியும் நடராஜரை வரவேற்றனர்,
தேர் நிலையில் இருந்து இரவு 8 மணிக்கு மேல் ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஸ்ரீ சிவகாமிசுந்தரி சமேத நடராஜமூர்த்தி கொண்டு செல்லப்பட்டு அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனைகள், ஏககால லட்சார்ச்சனை, புஷ்பாஞ்சலி சொர்ணாபிஷேகம் நடைபெறுகிறது. நாளை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், நண்பகல் பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. 4–ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவும், 5-ம் தேதி திங்கள்கிழமை ஞானப்பிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செய்துள்ளனர்.
திருவிழாவை காண வரும் பக்தர்களுக்கு சிதம்பரம் நகராட்சி சார்பில் சேர்மன் செந்தில்குமார் உத்தரவின் பேரில் கமிஷனர் மல்லிகா மேற்பார்வையில் சுமார் 100க்கும் மேற்பட்ட நகராட்சி ஊழியர்கள் குடிநீர் மற்றும் தூய்மை பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர், கடலூர் மாவட்ட டிஐஜி அருளரசு உத்தரவின் பேரில் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மேற்பார்வையில் சுமார் 800-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் போக்குவரத்து மற்றும் சட்ட ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் பக்தர்களுக்கு சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்
![]()





