செய்திகள்

சிதம்பரம் கிரீடு தொண்டு நிறுவனத்தில் ஆகாயத்தாமரை கைவினைப் பயிற்சி

Makkal Kural Official

சிதம்பரம், டிச. 15:

ஆகாயத்தாமரை தண்டுகளிலிருந்து கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சியின் நிறைவு விழா சிதம்பரம் கிரீடு தொண்டு நிறுவன பயிற்சி மையத்தில் நடைபெற்றது.

ஆகாயத்தாமரை தண்டுகளிலிருந்து கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் இரண்டு வார பயிற்சி நிறைவு பெற்றது. கிரீடு தொண்டு நிறுவனம் மற்றும் ஹோப் நிறுவனம் இணைந்து நடத்திய பயிற்சியின் நிறைவு விழாவிற்கு வந்திருந்தவர்களை கிரீடு தொண்டு நிறுவன மேலாளர் நீலகண்டன் வரவேற்றார்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கடல்வாழ் உயிரியல் உயராய்வு மைய இயக்குனர் பேராசிரியர் ராமநாதன் சிறப்புரை ஆற்றுகையில், நமது பகுதியில் இலவசமாக, அதிக அளவில் கிடைக்கும் ஆகாயத் தாமரையை பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு பயன்படுத்தும் இரண்டு தொண்டு நிறுவனங்களையும் பாராட்டினார். இந்த முயற்சிக்கு தன்னாலான ஆதரவை வழங்குவதாக உறுதி அளித்தார்.

கிரீடு தொண்டு நிறுவனத் தலைவர் முனைவர் வி. நடனசபாபதி தலைமையுரை ஆற்றுகையில், பெண்கள் மாதம் முப்பதாயிரம் வரை வருமானம் பெற கைத்தொழில்களை கற்றுக்கொண்டு, தொழிலினை செய்து, சந்தைப்படுத்துதல் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

புதுச்சேரி ஹோப் நிறுவன இயக்குனர் ஜோசப் விக்டர் ராஜ் பேசுகையில், 2023 ஆம் ஆண்டு முதல், ஹோப் நிறுவனம் ஆகாயத்தாமரை தண்டுகளிலிருந்து கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சிகளை நடத்தி வருகிறது. நீர்வாழ் களையை, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் கலைப் பொருட்களாக மாற்றுவதன் மூலம் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது; பெண்களின் திறனும், வருமானமும் மேம்படுகிறது என்று குறிப்பிட்டார்.

மேலும் பயிற்சியில் பங்கேற்ற 35 மகளிர்க்கும் சான்றிதழ்களும், ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டன. பயிற்சியில் பயிற்றுனர்களான பங்கேற்ற புதுச்சேரி பாகூரை சேர்ந்த ஆனந்தி, சுமதி மற்றும் ராஜலக்ஷ்மி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். முடிவில் கிரீடு அலுவலர் கவிதா நன்றி கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *