சென்னை, ஜன 23–
சென்னை அப்போலோ மருத்துவமனை, இருதயம் மற்றும் நுரையீரல் நோய்க்கான சிகிச்சையில் தேசிய அளவில் முக்கிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. 600-க்கும் மேற்பட்ட இருதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைகள், 1,000-க்கும் மேற்பட்ட எக்மோ சிகிச்சைகள், 2,000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்குத் தொடர் சிகிச்சை மற்றும் பராமரிப்பு, 250-க்கும் மேற்பட்ட செயற்கை இருதய பம்ப் (LVAD) சிகிச்சைகள், 250-க்கும் மேற்பட்ட நுரையீரல் ரத்த உறைவு நீக்க சிகிச்சைகளை, இம்மருத்துவமனையின் அனுபவமிக்க உறுப்புமாற்று சிகிச்சை குழு வெற்றிகரமாக செய்திருக்கிறது. இதன் மூலம் இந்தியாவின் மிகச் சிறந்த உறுப்பு மாற்று சிகிச்சை மையமாக சென்னை அப்போலோ மருத்துவமனை திகழ்கிறது.
இந்தச் சாதனையை விளக்கும் செய்தியாளர் சந்திப்பில், சிகிச்சை பெற்று மறுவாழ்வு பெற்ற நோயாளிகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். ராஜா சிவகுருநாதன் (வயது 59) என்பவர் ‘‘48 நாட்கள் எக்மோ சிகிச்சையில் இருந்த இவர், அவசர இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் உயிர் பிழைத்தார்.
சரவணன் (வயது 45) திடீர் நுரையீரல் செயலிழப்பு ஏற்பட்டது. 2 வாரங்கள் நீடித்த உயிர்காக்கும் இயந்திர ஆதரவு சிகிச்சைக்குப் பிறகு, நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டு குணமடைந்தார்.
ராதே ஷியாம் ரகுவன்ஷி (வயது 72) உடல்நிலை மோசமானதால் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, மேம்பட்ட ஆதரவுக்கு பிறகு இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் காப்பாற்றப்பட்டார்.
மீண்டும் இயல்பு
வாழ்க்கை…
டாக்டர் ஸ்ரீனிவாஸ் ராஜகோபாலா, நுரையீரல் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவுத் தலைவர் கூறுகையில், “தீவிர நுரையீரல் செயலிழப்பின் போது, சரியான நேரத்தில் எக்மோ சிகிச்சையைத் தொடங்குவது நோயாளியின் உயிரைக் காக்க மிக முக்கியம். இது நோயாளியை நிலைப்படுத்தவும், மாற்று அறுவை சிகிச்சைக்குத் தயாராகவும் அவகாசம் அளிக்கிறது. எங்களின் நோக்கம் நோயாளிகளின் உயிரைக் காப்பது மட்டுமல்ல, அவர்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதை உறுதி செய்வதே ஆகும்’’ என்றார்.0
டாக்டர் குமுத் குமார் திட்டால், இருதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர், “இதயம் மற்றும் நுரையீரல் செயலிழப்பு உள்ள நோயாளிகள், நிலைமை மோசமாவதற்கு முன்பே மாற்று அறுவை சிகிச்சைக்கான ஆலோசனைகளைப் பெறுவது அவசியம். ஆரம்ப நிலையிலேயே வரும்போது சிகிச்சை முடிவுகள் சிறப்பாக இருக்கும். வயது ஒரு தடையல்ல; முறையான மதிப்பீடு, துல்லியமான அறுவை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய கவனிப்பு ஆகியவை நீண்ட கால நல்வாழ்வை உறுதி செய்யும்’’ என்றார்.
இந்த நிகழ்ச்சியில் அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் (சென்னை மண்டலம்) தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் இளங்குமரன் கலியமூர்த்தி கலந்து கொண்டார்.
![]()





