செய்திகள்

சிகிச்சைக்கான செலவு தொகையை வழங்க மறுத்த காப்பீட்டு நிறுவனம்: நுகர்வோர் கோர்ட் கண்டனம்

Makkal Kural Official

சென்னை, நவ.23:

‘விதிகளுக்கு உட்பட்டு சிகிச்சை பெற்ற போதிலும் சிகிச்சைக்கான செலவு தொகையை காப்பீட்டு நிறுவனம் வழங்க மறுப்பது ஏற்புடையது அல்ல’ என கர்ப்பிணி தொடர்ந்த வழக்கில் நுகர்வோர் கோர்ட் தீர்ப்பு கூறி உள்ளது.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த இனியா என்பவர் சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த ஆண்டு மே மாதம் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் ரூ.15 லட்சத்துக்கு மருத்துவ காப்பீடு எடுத்தேன். இந்த மருத்துவ காப்பீட்டில் அனைத்து மருத்துவ சிகிச்சை சார்ந்த செலவு மற்றும் பிரசவம் சம்பந்தமான செலவுகள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் காப்பீட்டில் சேர்ந்த பின்பு கர்ப்பம் அடைந்தேன். அந்த சமயத்தில் இரைப்பை குடல் அழற்சி பாதிப்பு ஏற்பட்டதால் அதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். இதற்கு ரூ.34 ஆயிரத்து 312 செலவானது. இந்த தொகையை வழங்கும்படி காப்பீட்டு நிறுவனத்துக்கு விண்ணப்பித்தேன். கர்ப்ப காலத்தின்போது ஏற்படும் மருத்துவ சிகிச்சை செலவுகள் வழங்க காப்பீட்டு விதியில் இடமில்லை எனக்கூறி எனது விண்ணப்பத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் நிராகரித்தது.

நான், எடுத்துக்கொண்ட சிகிச்சையை பொறுத்தமட்டில் கர்ப்ப கால சிகிச்சை சம்பந்தப்பட்டது அல்ல. எனவே, சிகிச்சைக்கான செலவு தொகையை திரும்ப வழங்கவும், இழப்பீடாக ரூ.1 லட்சம் வழங்கவும் உத்தரவிட வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை ஆணையத்தின் தலைவர் ஜிஜா, உறுப்பினர் சிவக்குமார் ஆகியோர் விசாரித்தனர். அப்போது ‘சிகிச்சை தொடர்பான ஆவணங்களை பார்க்கும்போது மனுதாரர் கர்ப்ப காலத்துக்கான சிகிச்சையை தான் பெற்றுள்ளார் என்பது தெரிகிறது. எனவே, காப்பீட்டு திட்ட விதிகள்படி சிகிச்சைக்கான செலவு தொகையை மனுதாரர் கோர முடியாது’ என காப்பீட்டு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த ஆணையம், ‘மனுதாரரின் சிகிச்சை தொடர்பான ஆவணங்களை பார்க்கும்போது அவர் இரைப்பை குடல் அழற்சி பாதிப்புக்கு தான் சிகிச்சை பெற்றுள்ளார் என்பது தெரிகிறது. இது கர்ப்பம், குழந்தை பிறப்பு தொடர்புடைய சிகிச்சை அல்ல. எனவே, கர்ப்ப காலத்துக்கான சிகிச்சையை மனுதாரர் பெற்றுள்ளார் எனக்கூறி காப்பீட்டு நிறுவனம் சிகிச்சைக்கான செலவு தொகையை வழங்க மறுப்பது ஏற்புடையது அல்ல.

மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்தது சேவை குறைபாடு ஆகும். எனவே, மனுதாரருக்கு சிகிச்சைக்கான செலவு தொகை 34 ஆயிரத்து 312 ரூபாயை காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும். சேவை குறைபாடு மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *