செய்திகள்

சார்லி கிர்க் நினைவு அஞ்சலி: ஒன்றிணைந்த டிரம்ப்–மஸ்க்

Makkal Kural Official

அரிசோனா, செப். 22–

சார்லி கிர்க் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் – எலான் மஸ்க் ஆகியோர் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளர் நண்பர் சார்லி கிர்க், உட்டா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கடந்த 10–ந்தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் மரணம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் 22 வயது வாலிபர் டைலர் ராபின்சன் என்பவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் சார்லி கிர்க்கின் நினைவு அஞ்சலி நிகழ்வு அரிசோனாவில் நடைபெற்றது. நிகழ்வில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், சார்லி கிர்க்கின் மனைவியை கட்டியணைத்து ஆறுதல் தெரிவித்தார்.

நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் பேசியதாவது:–

சார்லி சிறந்த அமெரிக்க ஹீரோ. நாடு அவரை மிகவும் நேசித்தது. அவரின் கொலையை திட்டமிட்டு செயல்படுத்திய நபர் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். கடவுள் விரும்பினால் தனது கொடூர குற்றத்திற்கு இறுதி தண்டனையை பெறுவார்.

சார்லி கொலை ஒரு தனிப்பட்ட தாக்குதல் அல்ல, நாட்டின் மீதான தாக்குதல். இதுபோன்ற தாக்குதல்கள் எனக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தி உள்ளது. வரலாறு கிர்க்கின் செயல்பாடுகளை நினைவில் வைத்திருக்கும். வெள்ளை மாளிகை விழாவில் சார்லி கிர்க் சுதந்திரத்திற்கான ஜனாதிபதி பதக்கத்தை பெறுவார். அவர் பெரிதும் போற்றும் அழகான வெள்ளை மாளிகையில் அதற்கான விழாவை நடத்துவோம்.

இவ்வாறு டிரம்ப் பேசினார்.

இந்நிகழ்வில், துணை அதிபர் ஜேடி வான்ஸ், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, தொழிலதிபர் எலான் மஸ்க் மற்றும் கிர்க்கின் மனைவி எரிக்கா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய எரிக்கா, கணவரை சுட்டுக் கொன்ற கொலையாளியை மன்னிப்பதாக கூறினார். “என் கணவர், தன் உயிரைப் பறித்தவரைப் போன்ற இளைஞர்களைக் காப்பாற்ற விரும்பினார். அந்த இளைஞரை, நான் மன்னிக்கிறேன். கிறிஸ்து செய்தது போலவும், சார்லி செய்ததைப் போலவும் நான் மன்னிக்கிறேன்” என்று கூறினார்.

இதை சற்றும் எதிர்பாராத அங்கிருந்தவர்கள் எழுந்து நின்று கை தட்டி இந்த அறிவிப்பை வரவேற்றனர். எரிக்கா மேலும் பேசுகையில், “கைது செய்யப்பட்ட நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமா? என்று பலரும் என்னிடம் கேள்வி எழுப்புகிறார்கள். நான் நேர்மையாகச் சொல்கிறேன். இது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று எங்கள் வழக்கறிஞரிடம் கூறினேன். கைது செய்யப்பட்டவருக்கு மரண தண்டனை கொடுப்பதன் மூலம் என் கைகளில் ரத்தக்கறை படிய விரும்பவில்லை. நம் எதிரிகளிடத்திலும், நம்மைத் துன்புறுத்துபவர்களிடத்திலும் அன்பு காட்டுவதே சிறந்தது” என்று கூறினார்.

இதனையடுத்து டிரம்ப் கூறுகையில், “என் எதிரிகளை நான் வெறுக்கிறேன், அவர்களுக்கு எந்த நன்மையும் நடக்க நான் விரும்பவில்லை. மன்னிக்கவும், எரிக்கா” என்று கூறினார்.

நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் அதிபர் டிரம்பும், தொழில் அதிபர் மஸ்க்கும் அருகருகே அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தனர். சமீபத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ஒருவரையொருவர் பொதுவெளியில் விமர்சித்துக் கொண்ட நிலையில், கிர்க் நிகழ்ச்சியில் கைகுலுக்கியபடி உரையாடிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

டிரம்புடன் பேசியபடி அமர்ந்திருக்கும் இந்த புகைப்படத்தை எலான் மஸ்க் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *