செய்திகள்

சவூதி அரேபியாவில் பஸ் விபத்து: 42 இந்தியர்கள் பலி

Makkal Kural Official

மெக்கா, நவ. 17–

டீசல் டேங்கர் லாரி மீது பஸ் மோதிய விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 42 பேர் பலியாகி உள்ளனர்.நெஞ்சை உலுக்கும் இந்த விபத்து சவூதி அரேபியாவில் நடந்துள்ளது.

இந்தியாவில் இருந்து சவூதி அரேபியாவுக்கு உம்ரா புனிதப் பயணம் மேற்கொண்ட பக்தர்கள் மெக்காவில் இருந்து மதீனாவுக்குச் சென்றுகொண்டிருந்தனர். இந்நிலையில் மதீனாவுக்கு 160 கி.மீ. தொலைவில் உள்ள முப்ரிஹாத் என்ற இடத்தில் நள்ளிரவு 1.30 (இந்திய நேரப்படி) மணியளவில் டீசல் டேங்கர் லாரியின் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் 42 இந்தியர்கள் பலியானதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பேருந்தில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஐதராபாத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. 20 பெண்கள், 11 குழந்தைகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்தை அடைவதற்குள் பேருந்து முழுவதும் எரிந்து நாசமாகிவிட்டதாகவும், உடல்களை அடையாளம் காண்பது கடினம் என்றும் சவூதி மீட்புப் படையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், அவரின் நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி

இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:–

மதீனாவில் இந்தியர்கள் விபத்தில் சிக்கியதால் மிகுந்த வருத்தம் அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருடன் என் எண்ணங்கள் உள்ளன. காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். ரியாத்தில் உள்ள எங்கள் தூதரகம் மற்றும் ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகம் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றன. எங்கள் அதிகாரிகள் சவூதி அரேபிய அதிகாரிகளுடனும் நெருங்கிய தொடர்பில் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

ஜெய்சங்கர் அதிர்ச்சி

இந்த விபத்து குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில் கூறியிருப்பதாவது:–

“மெதினாவில் இந்தியர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளான நிகழ்வை அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். ரியாத்தில் உள்ள நமது தூதரகமானது, ஜெட்டா தூதரக அதிகாரிகளுடன் ஆலோசனையில் உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு முழு ஆதரவை அளிக்கும். அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறோம்”.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா முதல்வர் இரங்கல்

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–

“டிஜிபி மற்றும் அதிகாரிகள் விபத்தில் நமது மாநிலத்தைச் சேர்ந்த எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்பது குறித்த விவரங்களைச் சேகரித்து உடனடியாக வழங்க வேண்டும். இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்கிறோம். புதுடெல்லியில் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். தூதரக அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற மாநில அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.” என்று கூறியுள்ளார்.

ஐதராபாத் எம்.பி. பேட்டி

விபத்து பற்றி பேசிய ஐதராபாத் எம்.பி அசாதுதீன் ஒவைசி, “மெக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்ற 42 ஹஜ் யாத்ரீகர்கள் தீப்பிடித்து எரிந்த பேருந்தில் இருந்தனர். ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் துணைத் தலைவர் அபு மதன் ஜார்ஜிடம் பேசினேன். இந்த விஷயம் குறித்த தகவல்களை அவர்கள் சேகரித்து வருவதாக அவர் எனக்கு உறுதியளித்தார் என்றார்.

ஐதராபாத்தை சேர்ந்த இரண்டு பயண நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு, பயணிகளின் விவரங்களை சேகரித்து, ரியாத் தூதரகம் மற்றும் வெளியுறவுச் செயலாளருடன் பகிர்ந்து கொண்டேன். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், உயிரிழந்தோரின் உடல்களை இந்தியாவுக்குக் கொண்டு வரவும், யாராவது காயமடைந்தால், அவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யவும் நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.

தொலைபேசி எண்கள்

விபத்து குறித்த தகவல் அறிவதற்கு,8002440003(கட்டணமில்லா தொலைபேசி எண்), 0122614093, 0126614276, +966556122301 (வாட்ஸ் அப்) எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *