செய்திகள்

சமூக வலைத்தளங்களில் வதந்தி பதிவுகள்: சென்னையில் 25 பேர் மீது வழக்கு; 3 பேர் கைது

Makkal Kural Official

சென்னை, செப். 30–

சமூக வலைத்தளங்களில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்தி பதிவுகளை பதிவு செய்த 25 சமூக வலைதள கணக்காளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கரூர் பகுதியில் நடைபெற்ற அரசியல் கூட்ட நெரிசல் விபத்து குறித்து எவ்வித வதந்தியையும் யாரும் பரப்ப வேண்டாம். விசாரணை அடிப்படையில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வலைதளங்களில் சிலர் பரப்பும் பொய் செய்திகள் பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அமைகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பி வருவதாக கூறி 25 பேர் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அவர்களில் சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பாஜக மாநில செயலாளர் சகாயம் (வயது 38), தவெக உறுப்பினர் மாங்காடு பகுதியைச் சேர்ந்த சிவனேஸ்வரன் (36), தவெக நிர்வாகி ஆவடியைச் சேர்ந்த சரத்குமார் (32) ஆகிய 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் 22 பேரை தேடி வருகிறார்கள். இந்த நிலையில், கரூர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி கைது செய்யப்பட்ட சரத்குமார், சகாயம் ஜேம்ஸ், சிவனேஸ்வரனை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து 3 பேரும் போலீஸ் காவலுடன் அழைத்து செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையே பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் யாரும் சமூக வலைதளங்களில் தகவல்களை பதிவிட வேண்டாம் என்றும், மீறி செயல்படும் நபர்கள் மீது உரிய கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது

இந்த சூழலில், பத்திரிகையாளரும், யூடியூபருமான பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை எச்சரிக்கையையும் தொடர்ந்து அவர் கரூர் சம்பவம் தொடர்பாக பதிவிட்டதால் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *