செய்திகள்

சபரிமலையில் பக்தர்களின் வருகை: 15 லட்சத்தை கடந்தது

Makkal Kural Official

பத்தனம்திட்டா, டிச. 4–

கேரளம் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல–மகரவிளக்கு புனித யாத்திரைக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தினமும் ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பேர் மற்றும் உடனடி முன்பதிவு அடிப்படையில் 20 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் உடனடி முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களின் வருகை கட்டுக்கடங்காமல் இருந்ததால் கடந்த வாரத்தில் சன்னிதானம், பம்பை மட்டுமின்றி மலைப்பாதையிலும் கூட்ட நெரிசல் எற்பட்டது. நெரிசலில் சிக்கி பெண் பக்தர் ஒருவர் பலியானார். இதையடுத்து பக்தர்கள் நெரிசலில் சிக்குவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க கேரள ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்பேரில் உடனடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) அடிப்படையில் தினமும் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 16–ந்தேதி முதல் 30–ந்தேதி வரை 12 லட்சத்து 48 ஆயிரம் பக்தர்கள் வந்து தரிசனம் செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் கட்டுக்குள்ளது. இதனால் பக்தர்கள் சிரமமின்றி வழிபாடு செய்கின்றனர். இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் 3ம் தேதி மாலை 7 மணி நிலவரப்படி மொத்தம் 14,95,774 பக்தர்கள் கோயிலை அடைந்துள்ளனர். மாலை 7 மணிக்குப் பிறகான வருகை இன்னும் கணக்கிடப்படாததால், மொத்த பக்தர்கள் வருகை 15 லட்சத்தைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இணையவழி முன்பதிவுகளைப் பெற்ற பக்தர்களில் சுமார் 15 சதவீதம் பேர் வரவில்லை. நேற்று மாலை 7 மணி வரை 66,522 பக்தர்கள் சபரிமலைக்கு வந்தனர்

யாத்திரையின் (41 நாள்கள்) முக்கிய நிகழ்வான மண்டல பூஜை இம்மாதம் 27-ம் தேதி நடைபெறவுள்ளது. அப்போது ஐயப்பனுக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு, சிறப்புத் தீபாராதனை நடைபெறும். அன்றிரவு நடை அடைக்கப்பட்டு, மகரவிளக்கு பூஜைக்காக 30-ம் தேதி மீண்டும் திறக்கப்படும். மகரஜோதி தரிசனம் ஜனவரி 14-ம் தேதி நடைபெறவுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *