திருவனந்தபுரம், அக்டோபர் 22 குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக கேரளா சென்றுள்ளார். அவர் நேற்று மாலை திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மற்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் விமான நிலையத்தில் அவரை வரவேற்றனர். பின்னர் அவர் கவர்னர் மாளிகையில் தங்கியிருந்து ஓய்வெடுத்தார்.
இன்று காலை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய உள்ளார். இதற்காக சபரிமலையில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதிகாரப்பூர்வ தகவலின்படி, குடியரசுத் தலைவர் இன்று காலை 9.35 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு, 10.20 மணிக்கு நிலக்கல் ஹெலிபேடில் தரையிறங்குவார். அங்கிருந்து சிறப்பு வாகனத்தில் சபரிமலை சன்னிதானத்திற்குச் சென்று, காலை 11 மணியளவில் பம்பையை அடைந்து தரிசனம் மேற்கொள்வார்.
குடியரசுத் தலைவர் பதவியில் இருக்கும் ஒருவர் சபரிமலை தரிசனம் செய்யுவது இதுவே முதல்முறை என குறிப்பிடப்படுகிறது.
தரிசனத்தை முடித்த பிறகு, அவர் இன்றிரவே திருவனந்தபுரம் திரும்புவார். பின்னர் கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் ஏற்பாடு செய்துள்ள இரவு விருந்தில் அவர் பங்கேற்க உள்ளார்.
சபரிமலையில் ஜனாதிபதி வருகையையொட்டி, பம்பை, நிலக்கல் மற்றும் சன்னிதானம் பகுதிகளில் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
![]()





