வேலூர், டிச. 25–
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் மைய பாலகத்தில் 40 மி.லி அளவு கொண்ட புதிய குல்பி ஐஸ்கீரிம் விற்பனையை கலெக்டர் வே.இரா.சுப்புலெட்சுமி தொடங்கி வைத்தார்.
வேலூர் ஆவின் நிறுவனத்தில் ஏற்கனவே 25 மி.லி மற்றும் 70 மி.லி அளவு கொண்ட குல்பி ஐஸ்கீரிம் வகைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்விரண்டு வகைகளிலும் நாளொன்றுக்கு 4000 எண்ணிக்கையிலான குல்பி ஐஸ்கீரிம்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
ஆவின் குல்பி ஐஸ்கீரிம் வகைகளுக்கு சந்தையில் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. குல்பி வகை ஐஸ்கீரிம் விற்பனையை அதிகரிக்கும் வகையில் புதியதாக 40 மி.லி அளவு கொண்ட குல்பி ஐஸ்கீரிம் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 40 மி.லி. அளவு கொண்ட குல்பி ஐஸ்கீரிம் நாளொன்றுக்கு 1000 எண்ணிக்கையில் தயாரிக்கப்படுகிறது. வேலூர் ஆவின் நிறுவனத்தில் மொத்தமாக நாளொன்றுக்கு 5000 எண்ணிக்கையில் குல்பி ஐஸ்கீரிம்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
வேலூர் ஆவின் நிறுவனத்தில் ஆவின் தயிர் நாளொன்றிற்கு 1200 லிட்டர் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது ஆவின் தயிர் உற்பத்தியை நாளொன்றிற்கு 2000 ஆக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வின்போது ஆவின் பொது மேலாளர் இளங்கோவன், துணை பதிவாளர் (பால்வளம்) சித்ரா, துணை பொது மேலாளர் லிடியா உட்பட பலர் உடனிருந்தனர்.
![]()





