செய்திகள்

சத்துணவு ஊழியர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

Makkal Kural Official

சென்னை, ஜன. 21:

மாணவர்களின் நலன் கருதி சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், குடும்பப் பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், பணிக்கொடை அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 20-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து, சத்துணவு ஊழியர்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் சமூக நலத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால், திட்டமிட்டபடி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள் நேற்று தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டு, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் திடீரென சாலை மறியல் செய்ய முயன்றனர். இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களைத் தடுத்தனர். இதனால், போலீசாருக்கும் சத்துணவு ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை அடுத்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோல் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், சத்துணவு ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. மாணவர்களின் நலன் கருதியும், அரசின் மீது உள்ள நல்லெண்ண அடிப்படையிலும், சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கிறோம் என்றும், கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்து அறிவிப்பு வெளியிடப்படாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *