செய்திகள்

சட்ட விரோத பணப்பரிமாற்ற மோசடி வழக்கு: கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கைது

Makkal Kural Official

பெங்களூரு, செப். 10–

சட்டவிரோத இரும்புத்தாது ஏற்றுமதி தொடர்பான பண மோசடி வழக்கில், கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் கிருஷ்ண செயிலை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டம் கார்வார் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவான சதீஷ் கிருஷ்ண செயில் மீது, சட்டவிரோத இரும்புத் தாது ஏற்றுமதி தொடர்பாக 2010ல் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. சதீஷ் செயில், 1.25 லட்சம் டன் இரும்புத்தாதுவை 2010 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் ஏற்றுமதி செய்துள்ளார். அந்த இரும்புத்தாது, வனத்துறையால் பறிமுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகும். அதன் மொத்த மதிப்பு 86 லட்சம் கோடி ரூபாய்.

கடந்த 2024 அக்டோபர் மாதம் இவர் மீதான இரும்புத்தாது ஏற்றுமதி மோசடி வழக்கை விசாரித்த எம்எல்ஏ மற்றும் எம்பிக்களுக்கான சிறப்பு நீதிமன்றம், அவருக்கு ஏழாண்டு சிறையும் 44 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. இந்த வழக்கில் அவர் மீதான தண்டனையை கர்நாடகா உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

இதற்கிடையே, விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு அடிப்படையில், சதீஷ் செயில் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. கடந்த ஆகஸ்ட் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் சதீஷ் கிருஷ்ண செயில் வீட்டில் அமலாக்கத்துறை சார்பில் சோதனை நடத்தப்பட்டது. சட்டவிரோத சொத்து, ஏராளமான பணம் மற்றும் நகைகளைக் கண்டறிந்தது. இதையடுத்து அவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஒரு நாள் அமலாக்கத்துறை காவலில் வைக்கப்பட்டார். இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மேலும் காவலில் எடுக்க அமலாக்கத்துறை கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கைது குறித்து பேசிய கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், “எம்.எல்.ஏ சதீஷ் சைலை இப்போது கைது செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்த வழக்கு 2010 முதல் நடந்து வருகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுக்கு மட்டுமே அவர்கள் தொல்லை கொடுப்பதை உறுதி செய்கிறார்கள்” என்று கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *