சென்னை, ஜூலை.9-
2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கும், அண்ணா தி.மு.க. கூட்டணிக்கும் இடையேதான் போட்டி என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளின் கீழ் இயங்கும் பள்ளி-கல்லூரி விடுதிகள் ‘சமூக நீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதற்காக அவரை சென்னை அண்ணா அறிவாலயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று சந்தித்து நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.
அப்போது பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன், துணை பொதுச்செயலாளர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பின்னர், திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க.வும், அண்ணா தி.மு.க.வும் தேர்தல் பணிகளை சற்று முன்னதாகவே தொடங்கி இருக்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்திற்கு நான் ஏற்கனவே வாழ்த்து தெரிவித்திருக்கிறேன். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இனி எந்த காலத்திலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க மாட்டேன் என்று கூறினாரா? இல்லையா?. இவர்கள் ஜெயலலிதாவின் வாரிசுகளா? அல்லது அமித்ஷாவின் வழித்தோன்றல்களா? இவர்கள் யாரை பின்பற்றுகிறார்கள்.
தமிழகத்தில் இருப்பது அண்ணா தி.மு.க. தலைமையிலான கூட்டணியா? அல்லது பா.ஜ.க. கூட்டணியா? தேசிய ஜனநாயக கூட்டணி என்றால் இந்த கூட்டணிக்கு பா.ஜ.க. தலைமை தாங்குகிறது என்றுதானே பொருள். தமிழகத்தில் இந்தியா கூட்டணியில் தி.மு.க.வும், நாங்களும் இருந்தாலும், அது தி.மு.க. கூட்டணி, மதச்சார்பற்ற கூட்டணிதான். அதேபோல், அண்ணா தி.மு.க. கூட்டணி யின் பெயர் என்ன?.
முதலமைச்சர் வேட்பாளரை பிரதமர் மோடிதான் தீர்மானிப்பார் என்றால் அண்ணா தி.மு.க. எந்த நிலையில் இருக்கிறது என்பது கவலை அளிக்கிறது.
தமிழகத்தில் எத்தனை முனை போட்டி உருவானாலும், இந்த முறை இருமுனை போட்டிதான் இருக்கும். வருகிற தேர்தல் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கும், அண்ணா தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கும் இடை யேயான தேர்தலாகத்தான் இருக்கும்.
பலர் தனித்து போட்டியிடலாம், புதிய கூட்டணிகளை கட்டமைக்கலாம். ஆனால் தி.மு.க.வா? அண்ணா தி.மு.க.வா? என்றுதான் மக்கள் பார்ப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
![]()





