சென்னை, நவ. 28:
சட்டமன்றத்தில் தமாகா குரல் நிச்சயம் ஒலிக்கும் என்று ஜி.கே. வாசன் கூறினார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 12ம் ஆண்டு விழாவையொட்டி ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் தலைவர் ஜி.கே.வாசன் எம்பி கொடியேற்றியனார். இந்த பொதுச் செயலாளர்கள் ஜி.ஆர். வெங்கடேஷ், ராஜம் எம்பி நாதன், ராணி கிருஷ்ணன்,துணைத் தலைவர்கள் விடியல் சேகர் சக்தி வடிவேல், முனவர் பாஷா, மாவட்டத் தலைவர்கள் பிஜு சாக்கோ, அருண்குமார், லூயிஸ் மற்றும் நிர்வாகிகள் கே ஆர் டி ரமேஷ், ஆர் எஸ் முத்து, சந்திரசேகரன், டைல்ஸ்முருகன், வேதா, வெங்கடேசன், இருதயராஜ், மகளிர் அணி கல்யாணி நந்தினி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து ஜி.கே. வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை மக்கள் பிரச்சனைகளுக்காகக் குரல் கொடுப்பதில் எவ்விதத் தொய்வும் இன்றிச் செயல்பட்டு வருகிறது. காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15 முதலே சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளைத் தீவிரப்படுத்தியிருப்பதாகத் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் உள்ள 130 கட்சி மாவட்டங்களை நான்கு மண்டலங்களாகப் பிரித்து, ஒவ்வொரு மாதமும் மண்டலத்திற்கு எட்டு கூட்டங்கள் வீதம் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 32 பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களை நடத்தியிருப்பதாகக் கூறினார். இந்தக் கூட்டங்களில் தானும், மாநில நிர்வாகிகளும் கலந்துகொண்டு விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளை முன்னிறுத்திப் போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், இதுவே தமாகாவின் இடைவிடாத மக்கள் பணிக்குச் சான்று என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதற்குக் கோவையில் பள்ளி மாணவிக்கு நேர்ந்த துயரச் சம்பவமே சாட்சி என்று வேதனை தெரிவித்த அவர், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியே கோவையில் தமாகா சார்பில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டதை நினைவு கூர்ந்தார். கடந்த 11 ஆண்டுகளாகத் தொடர்ந்து மக்கள் பணியிலும் இயக்கப் பணியிலும் ஈடுபட்டு வரும் தங்களின் உழைப்பிற்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் காமராஜர் மற்றும் மூப்பனாரின் ஆசியுடன் நிச்சயம் பலன் கிடைக்கும் என்றும், அந்தப் பலன் சட்டமன்றத்தில் தமாகாவின் குரலாக எதிரொலிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் கால அவகாசம் உள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தைப் பார்த்து மேலும் சில கட்சிகள் கூட்டணியில் இணைவதற்கான நல்ல சூழல் நிலவி வருவதாகக் சூசகமாகத் தெரிவித்தார். கூட்டணி தர்மத்தை மதித்து நடக்கும் கட்சியாகத் தமிழ் மாநில காங்கிரஸ் எப்போதும் விளங்கி வருவதாகவும், இரண்டாவது அணியாக உள்ள தங்கள் கூட்டணி, தேர்தல் களத்தில் வெற்றிக் கூட்டணியாக மாறும் என்றும் அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.
டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவது குறித்த கேள்விக்கு மிகக் காட்டமாகப் பதிலளித்த ஜி.கே. வாசன், இது தமிழக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே காட்டுவதாகக் குற்றம் சாட்டினார். மழைக்காலம் வருமென்று தெரிந்தும், நெல் மூட்டைகளைப் பாதுகாக்கத் தார்பாய்கள் கூட வழங்காமல், நெல் முளைக்கும் அவல நிலைக்கு விவசாயிகளைத் தள்ளியிருப்பது வேதனையளிப்பதாகக் கூறினார். மத்திய அரசு தாமதமாக ஆய்வறிக்கை அனுப்பியதால்தான் இழப்பீடு வழங்க முடியவில்லை என்று தமிழக அரசு கூறுவது அபாண்டமான பொய் என்று சாடிய அவர், மழை நின்ற பிறகும் கணக்கெடுப்பு நடத்தாமல் காலம் தாழ்த்திவிட்டு, இப்போது மத்திய அரசின் மீது பழிபோடுவது ஏற்புடையதல்ல என்றார். விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயலை அரசு கைவிட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். வரும் சட்டமன்றத் தேர்தலில் தமாகா அங்கம் வகிக்கும் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
![]()





