சென்னை, ஆக.1–
நடப்பு ஆண்டு மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக நீர்வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமைச் செயலகத்திலுள்ள சட்டத் துறை நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.24.78 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட மின்நூலகத்தை துவக்கி வைத்தார்.
இதன் மூலம் சட்டத் துறையில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களை கண்டறியவும், மற்றும் அவர்களின் இருப்பிடத்தில் இருந்து கொண்டு அவர்களுக்கு தேவையான குறிப்பு ஆதாரங்களை தேடுவதற்கு உதவுகிறது. முதலமைச்சரின் அறிவுரைக்கிணங்க, அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அவ்வாறே, அரசு சட்டக் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 8 கல்லூரி நூலகர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:–
நூலகம் என்பது மிக முக்கியமான ஒன்று. அரசு அலுவலகங்களிலும், வீடுகளிலும் தினந்தினம் புத்தகங்களை படிக்கும் போதுதான் அறிவு விசாலமாகிறது. கல்லூரிகளிலும், அரசு அலுவலகங்களிலும் ஆராய்ந்து பார்க்க நூலகங்கள் தேவைப்படுகிறது. நான் 1971 முதல் தற்போது வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறேன்.
சட்டத்துறை
எனக்கு தாய்வீடு
சட்டமன்ற பேரவை நூலகத்தில் அமர்ந்து படிக்கும் போது பல புத்தகங்களை வாங்க சட்டமன்ற பேரவைச் செயலாளரிடம் பரிந்துரை செய்திருக்கிறேன். கல்லூரி மாணவர்கள் நூலகங்களை பயன்படுத்தியே ஆக வேண்டும். ஆகவே, நூலகத்தை பயன்படுத்தாவிட்டால் அவர் முழுமையான பார்வையை பெற்றவர் அல்ல. சட்டத்துறை எனக்கு தாய் வீடு போன்றது.
இங்கு ஒரு நூலகம் இருப்பது அனைவருக்கும் தெரியும் வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், நூலகர் பணியாளர்கள் கேட்கும் புத்தகங்களை எங்கிருந்தாலும் உடனடியாக எடுத்து தர வேண்டும். மேலும், அரசு சட்டக் கல்லூரியில் பணி நியமன ஆணை பெற்ற 8 நூலகர்களும் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், சட்டத்துறை செயலாளர் சி.ஜார்ஜ் அலெக்சாண்டர், சட்டக் கல்வி இயக்குநர் ஜெ.விஜயலட்சுமி மற்றும் துறையின் அனைத்து உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
![]()





