செய்திகள்

சட்டசபை வளாகத்தில் அன்புமணி ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டம்

Makkal Kural Official

சென்னை, அக்.14–

சட்டசபை வளாகத்தில் பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று காலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் சட்டசபையில் பா.ம.க. குழுத் தலைவர் ஜி.கே.மணி, பாமக கொறடாவாக அருள் ஆகியோரை நீக்கக் கோரி கடந்த மாதம் அன்புமணி ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைச் செயலர் சீனிவாசனை சந்தித்து கடிதம் கொடுத்தனர். ஆனால் இதுவரை பா.ம.க. குழுத் தலைவர் ஜி.கே.மணி நீக்கப்பட வில்லை.

இந்த பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே தமிழக சட்டசபை இன்று கூடியது. சட்டசபை வரும் வெள்ளிக்கிழமை வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. இன்று சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, சட்டசபை வளாகத்தில் அன்புமணி ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் மயிலம் தொகுதி சிவக்குமார், மேட்டூர் தொகுதி சதாசிவம், தருமபுரி தொகுதி வெங்கடேஸ்வரன் ஆகியோர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து, ஜி.கே.மணியை நீக்கக்கோரி சபாநாயகர் அப்பாவுவிடம் நினைவூட்டல் கடிதத்தையும் அவர்கள் வழங்கினர். இதனால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, அருள் ஆகியோர் சபாநாயகரை சந்தித்து பேசினர். சட்டமன்ற குழு தலைவர், கொறடா பொறுப்புகளில் இருந்து தங்களை நீக்கக்கூடாது என சபாநாயகரிடம் வலியுறுத்தி உள்ளனர்.

இதையடுத்து பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

பா.ம.க. 2 பிரிவாக செயல்படுவது வருத்தமாக உள்ளது, மக்களுக்காக போராடும் பா.ம.க. கட்சிக்குள்ளேயே போராட்டம் நடைபெறுவது வேதனை அளிக்கிறது.

பா.ம.க.வில் உள்ள அனைவரும் ஒன்றுபட வேண்டும். ஒற்றுமையாக இருந்தால் தான் பா.ம.க.வுக்கு வாழ்வு. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் காலத்திலேயே பா.ம.க.வுக்கு இப்படி ஒரு நிலை வந்தது வேதனையாக உள்ளது. ராமதாசுக்கு சோதனை ஏற்பட்டுள்ளது. நாங்கள் வேதனையில் உள்ளோம்.

ராமதாசுக்கு தான் முழு அதிகாரம் இருக்கிறது. அவரது வழியில் நாங்கள் பயணிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *