மதுரை, ஜன. 9–
சங்கரன்கோவிலில் மல்லிகை பூ இன்று கிலோ 7 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
தமிழர் திருநாளாம் தை திருநாளை முன்னிட்டு தொடர்ந்து மூன்று நாட்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகை மற்றும் பனி பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பூக்களின் விலை அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக மதுரை மாட்டுத்தாவணி பூக்கள் விற்பனை சந்தையில் தற்போது பூக்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, மல்லிகை பூ விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. மதுரை திருமங்கலம் பூ மார்கெட்டில் இன்று மல்லிகைப் பூ விலை கிலோ ரூ.7,000 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிச்சிப்பூ ஒரு கிலோ ரூ1200-க்கும், முல்லை பூ ரூ.1000 க்கும், கனகாம்பரம் ரூ.1000 க்கும், செவ்வந்தி பூ ஒரு கிலோ ரூ.100-க்கும், ரோஜா பூ கிலோ ரூ.800-க்கும், அரளிப்பூ ரூ.250-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பனிபொழிவு மற்றும் வரத்து குறைவு காரணமாக மல்லிகை பூவின் விலை உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இனி வரும் நாட்களிலும் இன்னும் விலை அதிகரிக்கலாம் எனவும் வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஈரோட்டில் மல்லிகை பூ கிலோ ரூ. 4 ஆயிரம் விற்பனை செய்யப்பட்ட நிலையில் சங்கரன் கோவிலில் ஒரு கிலோ மல்லிகை ரூ.7500-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
![]()





