செய்திகள்

கௌரவ விரிவுரையாளர்களுக்கு 3 மாத காலமாக சம்பளம் வழங்காத தி.மு.க. அரசுக்கு ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Makkal Kural Official

சென்னை, ஜூலை 4–

கௌரவ விரிவுரையாளர்களுக்கு 3 மாத காலமாக சம்பளம் வழங்காத தி.மு.க. அரசுக்கு ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கடந்த 4 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் அரசுத்துறைகளில் பணிபுரியும் ஏதாவது ஒரு பிரிவினருக்கு சம்பளம் தாமதப்படுத்துவது என்பது வழக்கமாக இருந்து வருகிறது. விதைச் சான்றளிப்புத் துறையில் பணிபுரிந்தவர்களுக்கு 2022–ம் ஆண்டு நான்கு மாதம் சம்பளம் வழங்காமல் இருந்தது, ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் நிரந்தர ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு 2024–ம் ஆண்டு சம்பளத்தை தாமதமாக வழங்கியது, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்காதது என்ற வரிசையில் தற்போது கௌரவ விரிவுரையாளர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை.

தமிழ்நாட்டிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான கௌரவ விரிவுரையாளர்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்களால்தான் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், இவர்களுடைய பணி இதுநாள் வரை நிரந்தரம் செய்யப்படவில்லை.

இவர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, மாதம் 57,500 ரூபாய் ஊதியம் 12 மாதங்களுக்கு வழங்கப்படவேண்டும். இதனை சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகும் தி.மு.க. அரசு செயல்படுத்தவில்லை. இவர்களுக்கு மாதம் வெறும் 25,000 ரூபாய் வீதம் 11 மாதங்களுக்கு மட்டும் ஊதியம் வழங்கப்படுகிறது. இப்போது இந்த ஊதியத்திற்கும் பங்கம் ஏற்பட்டு இருக்கிறது. கடந்த 3 மாத காலமாக இந்த ஊதியமும் வழங்கப்படவில்லை. இது கடும் கண்டனத்திற்குரியது.

நிர்வாகத் திறமையின்மை

தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு இது ஓர் உதாரணம். தமிழ்நாட்டில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களின் விபரங்கள் கல்லூரி கல்வித் துறை இயக்குநருக்கு மே மாதமே அனுப்பப்பட்டுவிட்டதாகவும், இதன் அடிப்படையில் 202 கோடி ரூபாய் நிதி கோரி கல்லூரி கல்வித் துறை நிதித் துறைக்கு கடிதம் அனுப்பியதன் பேரில் நிதித் துறையும் இதற்கான ஒப்புதலை வழங்கிவிட்டது என்றும், இருப்பினும் இதற்கான நிதியை உயர் கல்வித் துறை விடுவிக்காததால் கௌரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளம் கூட வழங்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கௌரவ விரிவுரையாளர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

இதன் விளைவாக, கௌரவ விரிவுரையாளர்கள் நிதி நெருக்கடிக்கு ஆளாகி, வட்டிக் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஒதுக்கப்பட்ட நிதியை ஒழுங்காக மாதா மாதம் கௌரவ விரிவுரையாளர்களுக்கு அளிக்க இயலாத திறமையற்ற நிர்வாகம் தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது.

முதலமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி, கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்க வேண்டிய மூன்று மாத சம்பளத்தை உடனடியாக வழங்கிட ஆவன செய்யவும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற தாமதத்தை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *