3 வடமாநில கொள்ளையர்களை சுட்டுப்பிடித்த போலீசார்
கோவை, நவ. 29–
கோவை- மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டுள்ள ஹவுசிங் யூனிட்டில் 1,800 குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இங்கு குடியிருப்பவர்கள் பெரும்பாலும் அரசு ஊழியர்களாக உள்ளனர். 14 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பில் நேற்று மர்ம நபர்கள் நுழைந்தனர். இவர்கள் இங்குள்ள குடியிருப்பில் பூட்டியிருந்த வீடுகளை குறிவைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். முதலில் ஒரு வீட்டில் குடியிருப்பவர்கள் தங்களது வீட்டில் இருந்த நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டதாக கவுண்டம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் கவுண்டம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் பல்வேறு வீடுகளில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இங்குள்ள ஏ பிளாக் கட்டிடத்தில் உள்ள 3 வீடுகளிலும், சி3 பிளாக் கட்டிடத்தில் உள்ள 10 வீடுகளில் புகுந்து மர்ம நபர்கள் கொள்ளையடித்தது தெரியவந்தது. மொத்தம் 13 வீடுகளில் 56 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்குள்ள கைரேகைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ஹவுசிங் யூனிட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க 3 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்து வந்தனர்.
இந்நிலையில் ஹவுசிங் யூனிட்டில் அடுத்தடுத்து 13 வீடுகளில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குளத்துபாளையம் பகுதியில், கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். தற்போது அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து திருடிய 56 சவரன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை போலீசார் மீட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும், 35 முதல் 40 வயதுடையவர்கள் என்பதும் தெரியவந்தது.
![]()





