கோவை, நவ. 10–
எஸ்ஐஆர் என்றால் ஸ்டாலின் பதறுவது ஏன் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டார்.
போலி வாக்காளர்கள், உயிரிழந்தவர்களின் பெயர்களை நீக்கத்தான் எஸ்ஐஆர். இதனை ஏன் எதிர்க்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டார்.
கோவை விமான நிலையத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை. கோவையில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது கொடுமையான செயல். மக்கள் நடமாடும் இடங்களில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
திண்டிவனத்தில் மாணவியை காவலர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டிய காவலர், பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பாலியல் வன்கொடுமையை தடுத்து நிறுத்த திராணியற்ற அரசாக தி.மு.க. உள்ளது தெளிவாகிறது.
போதை ஆசாமிகளால் தான் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடக்கின்றன. அரசு, காவல் துறை மீது பயம் இல்லாமல் தொடர் சம்பவங்கள் தமிழகத்தில் நடக்கிறது. தமிழகத்தில் காவல்துறை இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.
போக்சோ வழக்கில் ரூ.104 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறுவது வேதனை அளிக்கிறது.
டிஜிபி நியமனத்தில்
தாமதம் ஏன்?
இவ்வளவு குற்றங்கள் நிகழ்ந்தும்கூட நிரந்தர டிஜிபியை நியமனம் செய்யாதது ஏன்? தங்களுக்கு வேண்டப்பட்ட ஒருவரை டிஜிபியாக நியமிக்க வேண்டும் என்பதற்காகவே தி.மு.க. காலதாமதம் செய்கிறது.
டிஜிபி நியமன விவகாரத்தில் உரிய வழிமுறைகளை தி.மு.க. அரசு பின்பற்றவில்லை. நிரந்த டிஜிபியை நியமிக்க வலியுறுத்தியும் அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. டிஜிபி நியமனத்தில் ஏன் குளறுபடி? ஏன் அரசு இத்தனை பாரபட்சம் காட்டுகிறது?
வாக்காளர் சிறப்பு திருத்தம் இதற்கு முன்பு 8 முறை நடந்துள்ளது. முறைகேடாக இருக்கும் வாக்காளர்களை விடுவித்து தகுதியானவர்கள் இடம்பெற வேண்டும் என்பதே எஸ்.ஐ.ஆர்.
ஏன் பதறுகிறார்?
எஸ்.ஐ.ஆர் என்றாலே தி.மு.க. அலறுகிறது, பதறுகிறது. எஸ்.ஐ.ஆர். மேற்கொள்ள கூடாது என கூறுகின்றனர். ஒரு மாதம் காலம் இருக்கிறது.
300 வீடுகள் இருக்கும் ஒரு பாகத்தில் வாக்காளர் படிவம் கொடுக்க 8 நாட்கள் போதும். போலி வாக்காளர்களை நீக்க எஸ்.ஐ.ஆர். அவசியம். தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் பணிகளை மேற்கொள்ள வேண்டியது முக்கியம். பணிகளில் தாமதம் ஏற்பட வாய்ப்பே இல்லை. தி.மு.க.வும், கூட்டணிக்கட்சிகளும் எஸ்.ஐ.ஆர்-யை எதிர்க்கும் நோக்கம் திருட்டு வாக்குகளுக்காகத்தான். வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான செய்தியை மக்களுக்கு கூற ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். எஸ்.ஐ.ஆர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் போலி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள். உயிரிழந்த ஏராளமான வாக்காளர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ளது.
எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் அண்ணா தி.மு.க. வழக்கு தொடர்ந்தது உண்மைதான். திமுக தவறான தகவல்களை தெரிவிப்பதாலேயே எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் வழக்கு போட்டுள்ளோம். என் மகனையோ, மருமகனையோ கட்சியில், ஆட்சியில் எங்காவது பார்த்திருக்கிறீர்களா? இதற்குமுன் கட்சியில் இருந்து விலகியவர்கள் குடும்ப அரசியல் குற்றச்சாட்டை என் மீது வைத்தார்களா? என் மீது வேறு குற்றச்சாட்டு வைக்க முடியாததால் குடும்ப அரசியல் எனக் கூறுகிறார் செங்கோட்டையன்.
அண்ணா தி.மு.க. ஆட்சியை தி.மு.க.வால் குறை சொல்ல முடியாததால் பா.ஜ.க.வுடனான கூட்டணியை விமர்சிக்கின்றனர். எங்கள் கூட்டணிக்கு அண்ணா தி.மு.க. தான் தலைமை என உள்துறை மந்திரியே அறிவித்துவிட்டார். முதலமைச்சர் வேட்பாளரும் அண்ணா தி.மு.க.வை சேர்ந்தவர் தான் என்பதை அமித்ஷா உறுதி செய்துவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.
![]()





