கோவை, நவ.20-
கோவை வந்த பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அப்போது கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த கோரி மனு வழங்கினார்.
தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் கோவை கொடிசியாவில் இயற்கை வேளாண் மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி கோவைக்கு வந்தார்.
விமான நிலையத்தில் பிரதமர் மோடியை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மத்திய மந்திரி எல்.முருகன், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரி வேந்தர், கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் ஆகியோர் வரவேற்றனர்.
முன்னதாக பிரதமர் மோடியிடம் தமிழக மக்கள் நலன் சார்ந்த கோரிக்கை மனுக்களை அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அந்த மனுக்களை பிரதமர் மோடி பெற்றுக்கொண்டார்.
பிரதமர் மோடியிடம், எடப்பாடி பழனிசாமி அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:-
“எனது தலைமையிலான அம்மாவின் அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அறிவித்த கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை விரைந்து நிறைவேற்றித் தர தமிழக மக்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க சிறப்பு ஊக்கத்தொகை, மானியங்கள் வழங்க வேண்டும். மோட்டார் பம்பு செட்களுக்கான ஜி.எஸ்.டி. விகிதத்தை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும். மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.யை குறைக்க வேண்டும். ஜவுளி மற்றும் பின்னலாடை துறைக்கான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
சென்னையைத் தொடர்ந்து மதுரை மற்றும் கோவை மாநகரப் பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்யப்பட்டு மதுரை, கோவைக்கான மெட்ரோ ரயில் இயக்க விரிவான திட்ட அறிக்கையை மெட்ரோ நிறுவனம் தயாரித்து தமிழக அரசிடம் அளித்திருந்தது. அதற்கு சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு ஒப்புதல் அளித்து இருந்தது.
இந்தத் திட்டங்களுக்கான விரிவான அறிக்கையை தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பிவைத்த நிலையில், அதைச் செயல்படுத்துவதற்கான விதிமுறை களைச் சுட்டிக்காட்டி விரிவான திட்ட அறிக்கை கோப்புகளை மெட்ரோ நிறுவனத்துக்கு மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியானது.
மெட்ரோ ரயில் திட்டத்தை 20 லட்சத்துக்கும் மேலான மக்கள்தொகை கொண்ட மாநகரங்களில் செயல்படுத்தும் நிலை உள்ளதையும், அதற்கான ஆவணங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், மதுரை, கோவை மாநகரங்களில் அதைவிட குறைவான மக்கள்தொகை இருப்பதைச் சுட்டிக்காட்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்கவில்லை எனவும் அதில் சில விளக்கங்கள் கோரி திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கோவை, மதுரையில் மெட்ரோ அமைப்பதற்காக பிரதமர் மோடியிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
![]()





