கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி:
கோவை, டிச.27-
கேரளாவில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டதை தொடர்ந்து தமிழக-கேரள எல்லையில் 12 சோதனைச்சாவடிகள் அமைத்து கால்நடைத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா, கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களில் கோழி, வாத்து, காடை பண்ணைகள் உள்ளன. இந்த நிலையில் இந்த பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள், வாத்துகள் திடீரென்று அதிக எண்ணிக்கையில் இறந்தன. இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அந்த பறவைகளுக்கு ‘எச் 1, என் 1′ என்ற பறவை காய்ச்சல் பரவியிருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை கால்நடைத்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கோழி, காடை, வாத்து இறைச்சி மற்றும் முட்டைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கோழிப்பண்ணைகள் இயங்கி வருகின்றன. இந்த பண்ணைகளை மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மேலும் பண்ணைகளில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள பண்ணை உரிமையாளர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட கால்நடைத்துறை இணை இயக்குனர் மகாலிங்கம் கூறியதாவது:-
கோவையில் இதுவரை எந்த கோழிகளுக்கும் பறவை காய்ச்சல் அறிகுறி கண்டறியப்படவில்லை. கோழிகளுக்கு ஏதாவது அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை டாக்டருக்கு தகவல் கொடுக்க பண்ணை உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளோம். தமிழக-கேரள எல்லைகளான வாளையாறு, வேலந்தாவளம் உள்பட 12 இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வரும் கோழி, வாத்துகளுக்கான தீவனம் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
![]()





