4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட் தீர்ப்பு
கோவை, ஜூலை.19-
பிளஸ்-–1 மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை முதன்மை போக்சோ நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பு வழங்கினார். அவர்களில் 3 பேர் சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
கோவையை சேர்ந்த பிளஸ்-–1 படித்து வந்த 16 வயது மாணவிக்கு, ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு அவர்கள் காதலித்து வந்தனர். கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி இரவு 8 மணி அளவில் புறநகர் பகுதியில் உள்ள ஒரு பூங்காவுக்கு காதலனுடன் சென்ற மாணவி, அங்கு தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். இரவு 9 மணி அளவில் அவர்கள் இருவரும் வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர். அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் வந்த 7 பேர் கும்பல், மாணவியையும், அவருடைய காதலனையும் வழிமறித்தனர்.
அவர்கள் இருவரையும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மிரட்டினர். அதை தட்டிக்கேட்ட காதலனை அந்த பகுதியில் இருந்த மாந்தோப்புக்குள் தரதரவென்று இழுத்து சென்றனர். அங்கு வைத்து அவர்களை தாக்கியதுடன், இருவரின் ஆடைகளையும் களைந்தனர். அதை அவர்கள் தங்களது செல்போனில் வீடியோவும் எடுத்தனர்.
மாணவி அவர்களிடம் பலமுறை கெஞ்சியும் கேட்காத அந்த 7 பேரும், மாணவியை மிரட்டி ஒருவர் பின் ஒருவராக கூட்டு பலாத்காரம் செய்தனர். அதை வீடியோவும் எடுத்தனர்.
இவை அனைத்தும் மாணவியின் காதலனின் கண்முன்பே நடந்தது. அவரால் அதனை தடுக்க முடியாத நிலையில் இருந்தார்.
பின்னர் அவர்கள் இருவரையும் அங்கேயே விட்டுவிட்டு, அந்த கும்பல் தப்பி சென்றது.
உடல்நிலை பாதிக்கப்பட்டு மிகவும் சோர்வாக இருந்த அந்த மாணவியை, அவருடைய காதலன் தனது வீட்டுக்கு அழைத்து சென்று தங்க வைத்தார்.
மறுநாள் மாலை தனது வீட்டுக்கு சென்ற மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தாயிடம் கூறி கதறி அழுதார். பின்னர் இந்த சம்பவம் குறித்து ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் போக்சோ சட்டம் உள்ளிட்ட 15 சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, மாணவியை பலாத்காரம் செய்த 7 பேரையும் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள், கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பெருமாள் மகன் மணிகண்டன் (வயது 30), வடவள்ளியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கார்த்திக் (25), வடவள்ளி 4-வது குறுக்கு தெருவை சேர்ந்த மணிகண்டன் என்ற ஆட்டோ மணிகண்டன் (30), சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த தங்கராஜ் மகன் ராகுல் (21), ரவிக்குமாரின் மகன் பிரகாஷ் (22), வடவள்ளியை சேர்ந்த செல்வராஜ் மகன் நாராயணமூர்த்தி (30), சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் கார்த்திகேயன் என தெரியவந்தது. அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, கோவை போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மாணவியை 7 பேரும் பலாத்காரம் செய்த வீடியோ மற்றும் மருத்துவ பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிந்த நிலையில் நேற்று நீதிபதி பகவதி அம்மாள், வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
அவர் தனது தீர்ப்பில் மணிகண்டன், கார்த்திக், ஆட்டோ மணிகண்டன் ஆகியோருக்கு சாகும் வரை சிறை தண்டனையும், மற்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தார். மேலும் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து 7 பேரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.
![]()





