சென்னை, நவ. 19–
பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மதுரை மற்றும் கோவையிலும் மெட்ரோ ரயிலைக் கொண்டு வருவோம் என்றும் அவர் கூறினார்.
கோவை மற்றும் மதுரை மாநகரில் போதிய எண்ணிக்கையில் மக்கள் தொகை இல்லாததால் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான அனுமதியை மத்திய அரசு தர மறுத்துவிட்டது
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:–
‘கோயில் நகர்’ மதுரைக்கும், ‘தென்னிந்திய மான்செஸ்டர்’ கோவைக்கும் ‘நோ மெட்ரோ’ என நிராகரித்துள்ளது மத்திய பா.ஜ.க. அரசு. அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக்கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல.
கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம்!
அதேபோல மதுரை மற்றும் கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ ரெயிலைக் கொண்டு வருவோம்!” எனப் பதிவிட்டுள்ளார்.
![]()





