செய்திகள்

கோவையில் ரெயிலைக் கவிழ்க்க சதி: 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Makkal Kural Official

கோவை, அக். 26–

கோவையில் ரெயிலைக் கவிழ்க்க தண்டவாளத்தில் மரக்கட்டை வைத்த 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையில், ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளது. இங்கு வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் சொந்த ஊர் செல்ல பெரும்பாலும் ரெயில்களை பயன்படுத்தி வருகிறார்கள். இதற்காக கோவையில இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 22–ந்தேதி கோவையில் இருந்து இருகூர் வழியாக சிங்காநல்லூர் செல்லும் ரெயில் பாதையில் சூர்யா நகர் என்ற பகுதியில் தண்டவாளத்தில் மரக்கட்டைகள் இருப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே போலீசார், அங்கு ரெயில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டு இருந்த மரக்கட்டையை அகற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

அப்போது கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ், கோகுலகிருஷ்ணன், வினோத் என்ற சசிகுமார், கார்த்திக், புல்லுக்காட்டு பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மற்றும் சேலத்தைச் சேர்ந்த வேதவன் என்ற 6 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆகாஷ், தினேஷ், வேதவன் ஆகிய 3 பேர் ரெயில் வண்டியை சேதப்படுத்தி பயணிகளின் உடைமைகளை திருடும் நோக்கத்துடன் கீழே கிடந்த மரக்கட்டைகளை எடுத்து ரெயில் தண்டவாளத்தில் வைத்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் 3 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுத்துள்ளார். சிறையில் உள்ள அவர்களிடம் உத்தரவு நகல் வழங்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *