செய்திகள்

கோவிலுக்கு தானமாக கொடுத்த நிலம் அபகரிப்பு: 4 வாரங்களில் முடிவெடுக்க பதிவாளருக்கு ஐகோர்ட் உத்தரவு

Makkal Kural Official

சென்னை, நவ. 28:

கோவிலுக்கு தானமாக கொடுத்த நிலம் அபகரிக்கப்பட்டது தொடர்பான புகாரை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க மயிலாடுதுறையில் மாவட்ட பதிவாளருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள ஆதி கேசவ பெருமாள் கோவிலின் பக்தர் டாக்டர் டி.செல்வராஜ் தாக்கல் செய்துள்ள மனுவில், 1957ஆம் ஆண்டில் அலமேலு அம்மாள் என்பவர் தனக்கு சொந்தமான திருவேல்விகுடி கிராமத்தில் இருந்த நிலத்தை தானமாக கொடுத்ததாகவும், அந்த நிலத்தை பி.கல்யாணம், பி.கோவிந்தராஜன் ஆகியோர் மோசடியாக விற்பனை பத்திரம் தயாரித்து, அபகரித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த பத்திரப்பதிவு ஆவணங்களை ரத்து செய்யக் கோரி கடந்த ஆகஸ்ட் மாதம் அளித்த மனுவை இதுவரை பரிசீலிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். எனவே தனது மனுவை பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்கவும், தவறிழைத்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யு.கதிரவன் வாதங்களை முன்வைத்தார். பின்னர் உத்தரவிட்ட நீதிபதி, மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து, நான்கு வாரத்தில் முடிவெடுக்க வேண்டுமென மயிலாடுதுறை மாவட்ட பதிவாளருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *