கோவா: வட கோவாவின் ஆர்போரா பகுதியில் அமைந்துள்ள பிரபல நைட் கிளப் ஒன்றில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50 பேர் படுகாயம் அடைந்தனர். நள்ளிரவு 1 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அங்குள்ள சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக நைட் கிளப் மேனேஜர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான இடமாக கோவா இருந்து வருகிறது. இங்கு ஏராளமான நைட் கிளப்புகள் உள்ளன. இங்கு பல்வேறு கிளப்புகளில் விடிய விடிய, குறிப்பாக வார இறுதி நாட்களில், பார்டி நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அப்படி அங்கு பார்டி நடந்த ஒரு நைட் கிளப்பில் நேற்று எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆர்போரா என்ற பகுதியில் உள்ள ‘பிர்ச் பை ரோமியோ லேன்’ என்ற நைட் கிளப்பில் நேற்று நள்ளிரவு பயங்கரத் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்தச் சம்பவத்தில் சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தோர். கோவா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அந்த நைட் கிளப்பில் வேலை செய்து வந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
இது தவிர நான்கு சுற்றுலாப் பயணிகளும் இதில் பலியானதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாலை ஒரு மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கோவா காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. சமையலறைப் பகுதிக்கு அருகே ஏற்பட்ட ஒரு கியாஸ் சிலிண்டர் வெடிப்பே தீ விபத்துக்குக் காரணம் என முதலில் கூறப்பட்டது.
கியாஸ் சிலிண்டர் வெடித்த சில வினாடிகளிலேயே தீ மொத்தக் கட்டிடத்தையும் சூழ்ந்து கொண்டன. இதனால் உள்ளே இருந்தவர்கள் தப்பிக்க முடியவில்லை. நைட் கிளப் மூடும் பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தபோதே இந்த விபத்து நடந்துள்ளது.
இது தொடர்பாகக் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தனது டுவிட்டரில், “ஆர்ப்போராவில் நடந்த மோசமான தீ விபத்து குறித்து எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் அனைவரது உடல்நிலையும் சீராக இருக்கிறது. அவர்களுக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.
மேனேஜர் கைது
தீ விபத்து காரணமாகப் புகை கிளம்பிய நிலையில், அதில் பலருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உயிரிழப்புகள் அதிகரிக்க இதுவே முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக நைட் கிளப் உரிமையாளர் மற்றும் மேனேஜர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே மேனேஜர் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தோரில் பெரும்பாலானோரின் உடல் அடையாளம் காணப்பட்ட நிலையில், மீதமுள்ளவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகிறது.
பிரதமர் இரங்கல்
இந்த விபத்திற்குப் பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும் காயமடைந்தோருக்கு 50,000 ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
![]()





