கட்டபொம்மன் – 7
கட்டபொம்மன் அரண்மனைக்குள்ளேயே அவரது குலதெய்வமான ஜக்கமாள் கோயில் உள்ளது. ஜக்கம்மாளையும் முருகனையும் விரும்பி வணங்குவார். திருச்செந்தூர் முருகன் கோயிலில் காலை பூஜை முடிந்தவுடன் தான் கட்டபொம்மன் காலை உணவில் கை வைப்பார்.
காலை பூஜை முடியும் நேரத்தை அறிந்து கொள்ள மணி மண்டபம் அமைத்து இருந்தார் கட்டபொம்மன். திருச்செந்தூர் கோயில் தொடங்கி பாஞ்சாலங்குறிச்சி வரை வழிநெடுக குறிப்பிட்ட தூரத்தில் நகரா மண்டபம் அமைத்து இருந்தார். (நகரா என்பது ஒரு இசைக்கருவி)
காலை பூஜை முடிந்த உடன் கோயில் மணி ஒலிக்கும். பின்னர் அந்த ஒலி சத்தம் கேட்டு, அடுத்தடுத்த நகரா மண்டபத்தில் மணி ஒலிக்கப்படும். இறுதியில் பாஞ்சாலங்குறிச்சி அரண்மனையில் மணி ஒலிக்கும். இதற்கு பின்னரே காலை உணவில் கை வைப்பார் கட்டபொம்மன். இன்றும் கூட அந்த நகரா மண்டபங்கள் இருக்கிறது. தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் ஆத்தூர் சாலை ஓரத்தில் நகர்மண்டபம் இருக்கிறது.
திருச்செந்தூர் கோயிலுக்கு நிறைய நிலங்கள், நகைகளை கொடுத்துள்ளார். திருச்செந்தூர் கோயில் மாசி, ஆவணி மாதங்களில் கடைபிடிக்கும் மண்டக படியில் 9ம் நாள் மண்டகபடி வீரபாண்டிய கட்டபொம்மனுக்கென உள்ளது.
அன்றைய நாள், கட்டபொம்மனை மேள தாளத்துடன் அழைத்து சென்று முதல்மரியாதை செலுத்துவது வழக்கம். இன்றும் அது தொடர்கிறது.
வீரபாண்டிய கட்டபொம்மன் கனவில் ஓர் நாள் முருகன் வந்ததாகவும், பாண்டியா, உன்னோட மனைவி துரைச்சி (ராணி) க்கு போட்டிருக்கிற மாலை மாதிரி என் மனைவி குறத்தி கேட்குறாளே… ஆண்டி நான்… எங்கே போவேன்… என்று முருகன் கேட்டதாகவும், மறுநாள் அதே மாதிரி மாலையை கொண்டு திருச்செந்தூர் கோயிலுக்கு கட்டபொம்மன் கொடுத்ததாகவும், செவி வழி செய்தியுண்டு.
கோட்டையின் சிறப்பு…
பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கு மூன்று வாசல் இருந்து உள்ளது. வடக்கு வாசல், தெற்கு வாசல், கிழக்கு வாசல். தெற்கு வாசல் நுழைவு வாயிலாக பயன்படுத்தி இருக்கிறார்கள். வலிமையான கோட்டை அது. தெற்கு வாசல் முன்பு ஒரு முருகன் கோயில் இருந்து இருக்கிறது. செல்லியம்மன் கோயில் இருந்து இருக்கிறது.
கோட்டைக்கு முன்பு அக்ரஹாரம் இருந்துள்ளது. அந்த அக்ரஹாரத்தில் 12 வீடுகள் இருந்து உள்ளன. அங்கு இருந்த பிராமணர்கள் தான் இந்த கோயில்களில் பூஜை செய்வார்கள்.
கோட்டையை சுற்றி 5 குளங்கள் இருந்து உள்ளது. விவசாயம், கால்நடை, மக்கள் என தனித்தனியாக குளங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. மற்ற பாளையங்களை விட, செழிப்பான பாளையம், வருமானம் அதிகம் கொடுக்கும் பாளையமாக பாஞ்சாலங்குறிச்சி இருந்து உள்ளது.
300 ஆண்டுகளுக்கு முன்னரே…
கட்டபொம்மன் தெலுங்கு பேசுபவர் என்று சொன்னாலும், கட்டபொம்மன் தமிழ் பேசி தான் வாழ்ந்திருக்கிறார். தமிழ் நாட்காட்டியைத் தான் அவர் பயன்படுத்தி இருக்கிறார். அவர்களது ஆட்சிமுறை, மந்திரி சபை தமிழை மையமாக வைத்து தான் இயங்கி இருக்கிறது.
கட்டபொம்மன் பார் போற்றும் தலைவர். அவரை ஒரு குறிப்பிட்ட ஜாதி என்ற வட்டத்துக்குள் அடைப்பது தவறு. தானாதிபிள்ளை, வெள்ளைய தேவர் என அனைத்து சமுதாய மக்களுக்கும் கட்டபொம்மன் தனது மந்திரி சபையில் பிரதிநிதித்துவம் கொடுத்து உள்ளார். முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே சமத்துவத்தை கடைபிடித்தவர் கட்டபொம்மன்.
(தொடரும்)
![]()





