செய்திகள்

கொல்கத்தாவில் தனது 70 அடி உயர சிலையை காணொலி வாயிலாக திறந்து வைத்தார் மெஸ்ஸி

Makkal Kural Official

கொல்கத்தா, டிச. 13–

கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, கொல்கத்தாவில் தனது 70 அடி உயர சிலையை காணொலி வாயிலாக திறந்துவைத்தார்.

உலகின் மிகசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி. இவரது தலைமையிலான அர்ஜென்டினா அணி, 2022ல் ‘பிபா’ உலக கோப்பை வென்றது. மூன்று நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியாவிற்கு வந்துள்ளார். இன்று கொல்கத்தா மற்றும் ஐதராபாத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். நாளை மும்பை வான்கடே மைதானத்தில் ரசிகர்களை சந்திக்கிறார், 15-ஆம் தேதி டெல்லியில் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

கால்பந்து உலகின் முடிசூடா மன்னன், அர்ஜென்டினா ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி இன்று (சனிக்கிழமை) கொல்கத்தாவில் தரையிறங்கினார். ‘GOAT India Tour 2025 (கோட் இந்தியா டூர்)’ பயணத்திற்காக அவர் வந்திறங்கிய போது, கொல்கத்தா விமான நிலையமே ரசிகர்கள் கூட்டத்தால் அதிர்ந்தது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு மெஸ்ஸி இந்தியா வந்திருப்பதால் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். அமெரிக்காவின் மியாமியில் இருந்து துபாய் வழியாகப் பயணம் செய்து, இன்று அதிகாலை கொல்கத்தா வந்தடைந்தார் மெஸ்ஸி. விடியற்காலை நேரம் என்று கூடப் பாராமல், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டனர்.

மெஸ்ஸியின் விமானம் தரையிறங்கிய செய்தி பரவியதும், விமான நிலையத்திற்கு வெளியே திரண்டிருந்த ரசிகர்கள் “மெஸ்ஸி.. மெஸ்ஸி..” என்று விண்ணைப் பிளக்கும் வகையில் கோஷமிட்டனர். அர்ஜென்டினா கொடிகளை அசைத்தும், மெஸ்ஸியின் ஜெர்சியை அணிந்தும் ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் பலத்த பாதுகாப்பு வளையத்தை அமைத்திருந்தனர். பேரிகார்டுகளின் மீது ஏறி நின்று தங்களது தலைவனை ஒரு முறையாவது பார்த்துவிட மாட்டோமா என்று ரசிகர்கள் ஏங்கினர். கடைசியாக 2011-ம் ஆண்டு அர்ஜென்டினா அணிக்காக விளையாட மெஸ்ஸி கொல்கத்தா வந்திருந்தார். அதன் பிறகு இப்போதுதான் அவர் இந்தியா வருகிறார்.

இதுகுறித்து சுற்றுப்பயண ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தா கூறுகையில், கடைசியாக 2011-ல் கொல்கத்தா வந்த மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீன அணி வெனிசுலா உடன் 1–-0 என வென்றது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு மெஸ்ஸி இந்தியா வருவது மிகவும் நல்ல சூழ்நிலை. ரசிகர்கள் அவரைப் பார்க்க நல்லதொரு வாய்ப்பு. இந்தியாவில் மீண்டும் கால்பந்துடனான இணைப்பு வளரும். இதற்கு முன்பு இல்லாத வகையில் விளம்பரதாரர்கள் இந்திய கால்பந்திற்குக் கிடைக்கும்” என்றார்.

கொல்கத்தாவில் தெற்கு டும்டும் – லேக் டவுன் பகுதியில் ஸ்ரீ பூமி ஸ்போர்டிங் கிளப் மெஸ்ஸியின் 70 அடி சிலையை நிறுவியுள்ளது. வெறுமனே 40 நாள்களிலே இந்தச் சிலையை அவர்கள் உருவாக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மெஸ்ஸி தனது கையில் உலகக் கோப்பையுடன் இருக்கும் வகையில் இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை மெஸ்ஸி காணெலி வாயிலாக திறந்து வைத்தார். இது ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க அமைச்சரும் ஸ்ரீபூமி ஸ்போர்டிங் கிளப் தலைவருமான சுஜித் போஸ் கூறுகையில், “இது மிகப்பெரிய சிலை. 70 அடி உயரம் கொண்டது. உலகத்திலேயே மெஸ்ஸிக்கு வைக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய சிலை இதுதான் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *