செய்திகள்

கொட்டும் மழையில் திருவண்ணாமலையில் பரணி தீபம்

Makkal Kural Official

மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம்

திருவண்ணாமலை, டிச. 3–

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு “பரணி தீபம்” ஏற்றப்பட்டது. இன்று மாலை 2668 அடி உயர மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற காா்த்திகை தீப திருவிழா கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமர்சையாக நடந்து வருகிறது. கோயிலில் வண்ண மின்விளக்குகள் மற்றும் மலர் அலங்காரங்களால் கைலாயம் போல் காட்சி அளிக்கிறது. மகா தீபத் திருவிழாவை தரிசிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருவதால் நகரம் முழுவதும் விழா கோலமாக காணப்படுகிறது. 9 நாள்கள் தொடர்ந்து பஞ்சமூர்த்திகளின் மாவட வீதிவுலா நடைபெற்றது. பத்தாம் நாளான இன்று அதிகாலை அண்ணாமலையார் கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேதம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

அதனைத்தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கருவறை எதிரில் ஏகன் அனேகன், அனேகன் ஏகன்’ என்னும் தத்துவத்தை விளக்கும் வகையில் ஒரு மடக்கிலிருந்து ஐந்து மடங்குகளுக்கு தீபம் ஏற்றப்பட்டு அதில் இருந்து ஒரு மடக்கில் பரணி தீபம் ஏற்பட்டது. அதன்பின்னர் கருவறையில் ஏற்பட்ட பரணி தீபத்தை எடுத்துச்சென்று, கோயிலில் உள்ள விநாயகர், அம்மன், முருகர் உள்ள சன்னதிகளில் சிவாச்சாரியர்கள் பரணி தீபம் ஏற்றினர். இதில், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொட்டும் மழையிலும் கலந்து கொண்டு பக்தி கோஷம் முழங்க பரணி தீபத்தை வழிபட்டனர்.

அர்த்தநாரீஸ்வரர்

தரிசனம்

மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது. அப்போது ஆண்டுக்கு ஒரு முறை சில நிமிடங்கள் மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவம் ஆடியபடி மூன்றாம் பிரகாரத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவார். மாலை கோயிலில் இருந்து மகா தீபத்தையும் அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் தரிசனம் செய்வதற்கும் இடவசதிக்கு ஏற்றவாறு பக்தா்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

மகாதீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. 5 அடி உயரமும், 300 கிலோ எடையும் கொண்ட பெரிய கொப்பரை ஒன்று நேற்று சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது. மேலும், தீபம் ஏற்றுவதற்குத் தேவையான காடா துணியால் ஆன திரியும், 300 கிலோ நெய்யும் தயார் நிலையில் உள்ளன. இந்த மகாதீபத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டு வருகின்றனர். இதையொட்டி, கோயிலிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலையில் பக்தர்களின் வசதிக்காக, மாவட்ட நிர்வாகம் ‘கார்த்திகை தீபம்’ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் பக்தர்கள் பார்க்கிங் வசதி, தற்காலிக பேருந்து நிலையம், கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்கள், மருத்துவ முகாம், கூகுள் மேப் மற்றும் 14 கி.மீ. கிரிவலப் பாதை போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *