திருத்தணி, டிச. 30:
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி விட்டார் ஸ்டாலின் என்று எடப்பாடி குற்றஞ்சாட்டினார்.
எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று 178வது தொகுதியான திருத்தணியில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதையடுத்து திருத்தணி, சோளிங்கர் சாலை, வீரகநல்லூரில் உள்ள திறந்தவெளித் திடலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன்பாக எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
திமுக தேர்தல் அறிக்கையில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2500 ரூபாய் ஆதார விலை, ஒரு டன் கரும்புக்கு 4 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகச் சொன்னார்கள், கொடுக்கவில்லை. விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் அரசு திமுக அரசு.
அண்ணா திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு இரண்டு முறை பயிர்க்கடன் தள்ளுபடி செய்தோம், மும்முனை மின்சாரம் 24 மணி நேரம் கொடுத்தோம். சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை.
நெல்லையில் ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு மாணவிகள் சரக்கு அடிக்கிறார்கள். இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படியிருக்கிறது என்பதை எண்ணிப்பாருங்கள். பணம், நகை திருடுவது போல உடம்பில் உள்ள கிட்னி திருடுகிறார்கள். வறுமையில் வாடும் நபர்களை தேர்வுசெய்து பணத்தாசை காட்டி கிட்னி எடுக்கிறார்கள். அதுவும் திமுக எம்.எல்.ஏ மருத்துவமனையில் நடக்கிறது, இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. அண்ணா திமுக ஆட்சி அமைந்ததும் இதற்கு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
நீட் தேர்வு ரத்து என்றார்கள், ரகசியம் தெரியும் என்றார்கள் ரத்து செய்தார்களா? ரகசியத்தை சொன்னாரா? சட்டமன்றக் கூட்டத்தில் எங்களால் முடியாது என்று சொல்லிவிட்டார் ஸ்டாலின். இதுதான் அந்த ரகசியம். இதைத்தான் அண்ணா திமுகவும் சொன்னது. ஆனால் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று அந்தர்பல்டி அடித்துவிட்டது திமுக.
யார் பணம்?
எப்போது பார்த்தாலும் மகளிருக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை கொடுத்தேன் என்கிறார் ஸ்டாலின். உங்கள் வீட்டுப் பணத்தையா கொடுத்தீர்கள்? அதுவும் அண்ணா திமுக சார்பில் நானும் சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டமன்றத்திலும், பொதுக்கூட்டங்களிலும் பேசி அழுத்தம் கொடுத்த காரணத்தால் வேறு வழியின்றி, 28 மாதம் கழித்துத்தான் உரிமைத் தொகை கொடுத்தார். இப்போது 17 லட்சம் பேருக்கு விதிகளை தளர்த்தி கொடுக்கிறார்கள், ஏன் அப்போதே நிபந்தனையைத் தளர்த்தியிருக்கலாமே?
மக்கள் செல்வாக்கு இழந்ததால் இப்போது கொடுக்கிறார், இன்னும் 5 மாதம் தான் கொடுக்க முடியும். 2021 தேர்தல் அறிக்கையில் அண்ணா திமுக சார்பில் மாதம் 1500 ரூபாய் கொடுப்பதாகச் சொன்னோம், ஆனால் திமுக மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று, ஏமாற்றிவிட்டது.
கேஸ் மானியம் 100 ரூபாய் கொடுத்தார்களா? கல்விக்கடன் தள்ளுபடி செய்தார்களா? கூடுதலாக சர்க்கரை ஒரு கிலோ கொடுப்பதாகச் சொன்னார்கள், கொடுத்தார்களா? எதுவுமே நிறைவேற்றவில்லை.
வீடில்லாத ஏழை பட்டியலின மக்களுக்கு கைத்தறி நெசவாளர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். இங்குள்ள 4 ஆயிரம் குடும்பங்களுக்கு பட்டா இல்லை என்கிறார்கள். அண்ணா திமுக ஆட்சியில் நத்தம், புறம்போக்கில் வசிக்கும் 4 ஆயிரம் குடும்பத்துக்கும் பட்டா கொடுக்கப்படும்.
அண்ணா திமுக ஆட்சியில் 52 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தோம். 7300 கோடி செலவு செய்தோம். திமுக அரசு நிறுத்தியது, இப்போது மீண்டும் கொடுப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள், வருமா என்று தெரியவில்லை. அண்ணா திமுக ஆட்சி மலர்ந்ததும் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுக்கப்படும்.
திருத்தணி சுப்ரமணியசுவாமி திருக்கோயில் முருகனின் ஐந்தாம் படை வீடு என்ற பெருமை பெற்றது. இங்கு உள்ளூர் மக்கள் வாரந்தோறும் செவ்வாய்கிழமை வழிபாடு செய்ய சிறப்பு அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் அந்த அனுமதி மறுக்கப்பட்டது. மீண்டும் அண்ணா திமுக ஆட்சியில் செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்ய சிறப்பு அனுமதி வழங்கப்படும்.
அண்ணா திமுக ஆட்சியில் நான் முதல்வராக இருந்தபோதுதான் தைப்பூசத்துக்கு விடுமுறை விட்டோம். விசைத்தறி, கைத்தறி நெசவாளர் நிலை சரிந்துபோய் இருக்கிறது, மீண்டும் சிறக்க அண்ணா திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு எடப்பாடி பேசினார்.
![]()




