சென்னை, ஜூலை 20–
கொடுங்கையூர், ஜெய்பாலாஜி நகர் பகுதியில் வசித்து வரும் எட்வர்ட் என்பவர் நேற்று முன்தினம் இரவு அவரது மகன் சைக்கிளை வீட்டின் காம்பவுண்டிற்குள் நிறுத்தி வைத்து விட்டு, சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது, சைக்கிள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து எட்வர்ட் கொடுங்கையூர் காவல் நிலைய குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதே போல் சைக்கிள்கள் காணாமல் போனது குறித்து மேலும் புகார்கள் தாக்கலான நிலையில் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் உயரதிகாரிகள் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்களுக்கு வழங்கிய அறிவுரையின்பேரில், நடுத்தர குடும்பத்தினர் பல்வேறு பணிகளுக்கு செல்லவும், அத்தியாவசிய பயன்பாடுகளுக்கும், படிக்கும் குழந்தைகள் பள்ளி, கல்லூரி மற்றும் டியூசன் வகுப்புகளுக்கு செல்வதற்கும், உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டும் பயிற்சிக்கும் பயன்படுத்தப்பட்டு வரும் சூழ்நிலையில் சைக்கிள்கள் திருட்டுபோவது குறித்து தீவிர கண்காணிப்பு செய்து, சைக்கிள் திருடுபவர்களை கண்டறிந்து கைது செய்து நடவடிக்கை எடுத்துவரப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக மேற்கண்ட சைக்கிள் திருடுபோன சம்பவயிடத்திலிருந்து கொடுங்கையூர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, தொடர்ச்சியான கண்காணிப்பு கேமரா பதிவுகளைகொண்டும் மேற்படி சைக்கிள் திருட்டு வழக்கில் தொடர்புடைய தாமோதரன் (54) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து கொடுங்கையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருடு போன 6 சைக்கிள்கள் உட்பட சென்னையில் பல்வேறு பகுதிகளில் திருடப்பட்ட 40 சைக்கிள்கள் மீட்கப்பட்டது.
மேலும் விசாரணையில் தாமோதரன், கொடுங்கையூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகள் முன்பு மற்றும் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலைமதிப்புள்ள சைக்கிள்களை நோட்டமிட்டு திருடியுள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட தாமோதரன் விசாரணைக்குப் பின்னர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
![]()





