செய்திகள்

கே.எம். காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது: ஸ்டாலின் வழங்கினார்

Makkal Kural Official

சென்னை, ஆக. 15–

சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விருதுகளை வழங்கினார்.

தமிழகத்திற்கும், தமிழின வளர்ச்சிக்கும் பணியாற்றியவர்களை கவுரவிக்கும் வகையில் 2025ம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்த விருதுடன் ரூ.10 லட்சத்துக்கான காசோலையும் வழங்கி முதலமைச்சர் கவுரவித்தார்.

பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருநல்லூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். மூத்த அரசியல் தலைவர், மனித நேய மாண்பாளர், அறிவார்ந்த சொற்பொழிவாளர். திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் 15 ஆண்டுகள் வரலாற்றுத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத்தலைவர் ஆவார். தமிழ்நாட்டில் இவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியப் பொதுச் செயலாளரும், தமிழ் மாநிலத் தலைவராகவும் இருந்தவர். வேலூர் மக்களவைத் தொகுதிக்கு 2004ல் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

கோவையில் 2010ம் ஆண்டில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் செம்மொழித் தமிழும் அரபியும் – ஓர் ஒப்பாய்வு என்ற ஆய்வுக் கட்டுரை வழங்கியவர்.

கண்ணிய தென்றல் காயிதே மில்லத் காலம் முதல் தொடர்ந்து சமூக நல்லிணக்கம் பரப்பி வரும் சிந்தனையாளர், பல நூறு பட்டதாரிகளை உருவாக்கி அவர்களின் வாழ்வினை உயரத்துக்கு உயர்த்திய ஆசானும் ஆவார். தமிழ் நாட்டில் திருக்குர்ஆன் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க வேண்டும் என்பதைத் தம் வாழ்வின் லட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வருபவர்.

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றிய கே. எம். காதர் மொகிதீனுக்கு 2025ம் ஆண்டிற்கான “தகைசால் தமிழர் விருது” தமிழக அரசு வழங்கி சிறப்பித்துள்ளது.

இஸ்ரோ தலைவருக்கு

அப்துல் கலாம் விருது

இஸ்ரோ விண்வெளித்துறை தலைவர் மற்றும் செயலாளர் டாக்டர் வ. நாராயணனுக்கு டாக்டர் அப்துல் கலாம் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலக்கட்டுவிளை என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர் வ. நாராயணன், தமிழ்நாடு அரசுப் பள்ளியில் படித்து, நாகர்கோவிலில் உள்ள அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திர பொறியியல் டிப்ளமோ பட்டம் பெற்றார். பின்னர், ஐ.ஐ.டி. கரக்பூரில் கிரயோஜெனிக் இன்ஜினியரிங் துறையில் வெள்ளிப் பதக்கத்துடன் முதலிடம் பிடித்து எம்.டெக் பட்டம் பெற்றார். அதன் பிறகு அங்கேயே முனைவர் பட்டமும் பெற்றார்.

இஸ்ரோவில் 41 ஆண்டுகளாக பல முக்கிய தலைமைப் பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றியதற்காகவும், குறிப்பாக 7 ஆண்டுகள் திரவ இயக்க முறைமைகள் மையத்தின் இயக்குநராக பணியாற்றியதை கருத்தில் கொண்டும்,வ. நாராயணனை விண்வெளித் துறைச் செயலராகவும், இஸ்ரோ தலைவர் மற்றும் விண்வெளி ஆணையத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

முனைவர் வ. நாராயணன், இஸ்ரோவின் ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்களுக்கான உந்துவிசை அமைப்புகளை உருவாக்குவதில் முன்னோடியாகத் திகழ்ந்தார். முனைவர் வ. நாராயணன், இஸ்ரோவின் அனைத்துப் பணிகளிலும் முக்கியப் பங்களிப்புகளைச் செய்துள்ளார். குறிப்பாக, சந்திரயான்–2 மற்றும் சந்திரயான்–3 திட்டங்களுக்கான ஏவுகணை வாகனங்கள் மற்றும் விண்கலங்களுக்கான உந்துவிசை அமைப்புகளை உருவாக்குவதில் தலைமை தாங்கினார். சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை மெதுவாகத் தரையிறங்குவதற்கான கட்டுப்படுத்தக்கூடிய உந்துவிசை அமைப்பை உருவாக்கியதும் இதில் அடங்கும்.

விண்வெளிப் போக்குவரத்து, உள்கட்டமைப்பு மற்றும் விண்வெளிப் பயன்பாடுகளில் சிறந்து விளங்குவதன் மூலம் நாட்டின் பொதுமக்களுக்குப் பயன் அளிப்பதிலும், இந்தியாவில் வலுவான விண்வெளி சூழல் அமைப்பை உருவாக்குவதிலும் தொழில்நுட்ப மற்றும் நிர்வாக ரீதியான தலைமைத்துவத்தை வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்பனா சாவ்லா விருது

துணிவு மற்றும் சாகச செயலுக்கான சாதனையைப் பாராட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த துளசிமதி முருகேசன் என்பவருக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் கவுரவித்தார்.

துளசிமதி முருகேசன் பிறவியிலேயே இடது கையில் தசைநார் சிதைவு குறைபாடு இருந்த போதும், உடல் சவால்களை தடையாகக் கருதாமல் இறகுப் பந்தாட்டம் விளையாட்டு துறையில் சாதனை படைத்து வருகிறார்.

வறுமையான சூழ்நிலையிலும் கூட விளையாட்டில் மட்டுமல்லாமல், கல்வியில் ஆர்வம் கொண்ட துளசிமதி, நாமக்கல் அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் நான்காம் ஆண்டு பயின்று வருவது, அவரது தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியை எடுத்துக் காட்டுகின்றன.

தான் பிறந்த மண்ணிற்கு பெருமை சேர்க்கும் விதமாக, இச்சிறு வயதில், பல்வேறு உலக நாடுகளில் நடைப்பெற்ற போட்டிகளில் பங்கேற்று, இதுவரை 22 தங்கம், 11 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் என மொத்தம் 40 பதக்கங்களை வென்று தனக்கென தனி முத்திரை பதித்துள்ளார்.

2024ம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் பெண்மணி என்ற வரலாற்று சிறப்பை பெற்றுள்ளார். மேலும் விளையாட்டுத் துறையில் நாட்டின் இரண்டாவது உயரிய விருதான “அர்ஜூனா விருது“ பெற்ற பெருமைக்குரியவர். துளசிமதி முருகேசனின் தைரியமான வாழ்க்கை பயணம் பிற பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *