சென்னை, ஆக. 11–
திடீரென நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேரளாவிலிருந்து டெல்லி செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் சென்னையில் அவசரமாக தரையிறங்கியது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு திருநெல்வேலி காங்கிரஸ் எம்.பி. ராபர் ப்ரூஸ், கேரள எம்.பி.க்கள் கே.சி.வேணுகோபால், கொடிக்குனில் சுரேஷ், அதூர் பிரகாஷ், கே.ராதாகிருஷ்ணன் உள்பட 150 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் நேற்று இரவு புறப்பட்டது.
அப்போது நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறை விமானி கண்டறிந்தார். உடனே இதுகுறித்து சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு தகவல் அளித்து, அனுமதி பெற்றார். விமானம் பத்திரமாக தரையிறக்குவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
எனினும் விமானத்தை தரையிறக்க முயன்ற போது, அதே ஓடுபாதையில் மற்றொரு விமானம் இருந்ததாக அறிவிக்கப்பட்டது. பிறகு, சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி, விமானத்தை மீண்டும் மேலே எழுப்பி பிறகு 2வது முயற்சியில் பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கினார்.
விமானத்தில் இருந்த எம்.பி.க்கள் உள்ளிட்ட பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
விமானி, கோளாறை சரியான நேரத்தில் கண்டறிந்ததால், பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் இந்த சம்பவம், காரணமாக பயணிகளிடையே சற்று பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் அனைத்து பயணிகளும் மாற்று விமானத்தில் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பயணிகளுக்கு ஏற்பட்ட தாமதத்திற்கு ஏர் இந்தியா நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் எம்பி கேசி. வேணுகோபால் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில், ‘பயங்கரமான அனுபவம். விமானியின் தைரியமான முடிவு பலரின் உயிரைக் காப்பாற்றியது,’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
![]()





