சிறுகதை விழாக்கள்

சிறுகதை …..கூழ் ஊற்றும் விழா..! விழா 28 – ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

ஊ… ஊ…. என்ற பெண்களின் குலவைச் சத்தம். டூ… டூ … என்ற பம்பை, உடுக்கைகளின் சத்தம் கங்கை அம்மன் கோயில் முழுவதும் கேட்டுக் கொண்டிருந்தது. அந்தப் பகுதியில் கூழ் ஊற்றும் விழா அமர்க்களமாக நடந்து கொண்டிருந்தது. மக்களெல்லாம் கோயில் முன்கூடியிருந்தார்கள். அண்டா அண்டாவாக கூழ் நிரம்பியிருந்தது. கற்பூரம், தேங்காய், தீபம் காட்டி அதனுடன் கூழையும் வைத்து அபிஷேகம் செய்து கொண்டிருந்தார், கோயில் பூசாரி.

” இந்தக் கூழ் ஊத்துறதுனால என்ன பலன்? எதுக்காக இந்தக் கூழ் ஊற்று விழா வைக்கிறாங்க “

என்று ஒருவர் கேட்க

“சித்திரை, ஆடி மாதங்கள்ல வெயில் அதிகமா இருக்கும். அந்த வெயிலோட உக்கிரத்தைக் குறைக்கத் தான் இந்தக் கூழ் ஊத்துற விழா. அந்தக் காலத்திலிருந்தே இதைக் கடைபிடிச்சிட்டு வாராங்க “

என்று ஒருவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ,அந்தப் பகுதியில் ஓட்டுக் கேட்டு ஒரு அரசியல் கூட்டம் வந்து கொண்டிருந்தது.

“அம்மா எங்களுக்கு தான் நீங்க ஓட்டு போடணும். வருகிற ஆட்சியில கண்டிப்பா உங்களுக்கு நல்லது செய்வோம். இப்ப இருக்கிறதெல்லாம் நல்ல ஆட்சி இல்ல. மக்களுக்காக இல்லாம அவங்களாகவே ஆட்சி செய்றாங்க. அவங்க , அவங்களச் சேர்ந்தவர்களை மட்டும் தான் முன்னேற்றிட்டு இருக்காங்க.அவங்களுக்கு மட்டுமே ஆரம்பிக்கப்பட்ட கட்சியா இருக்கு .எங்களுக்கு நீங்க ஓட்டு போட்டீங்கன்னா. உங்களுக்கு விசுவாசமா இருப்போம். உங்களுக்கு என்ன தேவையோ அதை செய்வோம் ” என்று வீதி வீதியாக ஓட்டுச் சேகரித்துக் கொண்டே வந்தார் அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருக்கு நிற்கும் வேட்பாளர் வேணு .

“சரிங்க . கண்டிப்பா நாங்க உங்களுக்கே ஓட்டுப் போடுறோம். நீங்க எங்களுக்கு என்ன செய்வீங்க. “

என்றார் ஒரு வாக்காளர்.

” நிச்சயமா உங்களுக்கு நாங்க நல்லது செய்யத்தான் வந்து இருக்கோம். “

“போன தடவை அப்படித்தான் சொன்னீங்க. ஆனா, எதுவுமே செய்யலையே ? “

என்று எதிர் கேள்வி கேட்டார், வாக்காளர்.

” அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க கண்டிப்பா நாங்க செய்வோம்”

“நீங்க செய்யலன்னா என்ன செய்றது? “

” கண்டிப்பா நாங்க செய்வோம். பத்திரத்தில் கூட எழுதித்தாரோம் . “

” இவ்வளவு சொல்றீங்க. நிச்சயமா இந்த முறை உங்களுக்குத் தான் எங்க ஓட்டு “

என்று அந்தப் பகுதியில் இருந்தவர்கள் சொல்ல

” சிறப்பு. சந்தோஷம். நம்முடைய பேச்ச அப்படியே மதிக்கிறாங்க. இவங்களுக்கு நாம ஏதாவது செய்யணுமே?”

என்று வேணு அவருடன் வந்த ஆட்கள் தெருவுக்குள் நுழைந்தார்கள்.

” என்னடா இங்க ஒரே சத்தமா இருக்கு “

என்று வேணு கேட்க

“கங்கை அம்மன் கோயில்ல கூழ் ஊத்துற விழா நடந்துகிட்டு இருக்கு. “

” கங்கை அம்மன் கோயிலா ? அது ஒரு மாதிரியான ஒதுக்குப்புறமான ஏரியாவாச்சே ? அங்கே போய் தான் ஆகணுமா ?

“ஆமா தலைவரே பாேய்த்தான் ஆகணும் .அங்க ஒரு 5000 ஓட்டு இருக்குமே? அதைவிட முடியுமா ?”

என்று ஒருவர் சொல்ல

” அங்க இருக்குறவனுக எல்லாம் குளிக்க மாட்டானுக. சுத்தம் இல்லாம இருப்பானுக. அவங்க கிட்ட போய் எப்படி அதுவும் கூழ் ஊத்துற திருவிழா ங்கிற அதுக்குள்ள போய் மாட்டுன என்ன ஆகும்னு தெரியலையே? இன்னொரு நாளைக்கு வரலாமா? என்று வேணு சொல்லிக் கொண்டிருக்கும்போதே

” நம்ம தலைவர் வந்துட்டார். நம்ம ஏரியாவ நம்ம தொகுதியக் காக்கிற தலைவர் வந்துட்டார் .நம்ம மக்களை எல்லாம் காக்குறதுக்காகக் கடவுள் அனுப்பி வச்ச தூதுவர் “

என்று அந்தத் தெருக்காரன் சொல்ல

” என்னடா இவன் இப்படி வேற பேசிட்டு இருக்கான். போய்த் ஆகணுமா ? “

வேணு நெளிய

அதற்குள் அங்கிருந்து வந்த ஒரு பெண்மணி

“ஐயா, கடவுளா பாத்து தான் உங்கள இங்க அனுப்பி வச்சிருக்காரு. நீங்க வாங்கய்யா. எங்க கங்கை அம்மன கையெடுத்து கும்பிட்டிங்கன்னா ,நீங்க நினைச்சது நிறைவேறும் .கண்டிப்பா இந்த தடவை நீங்க தான் எங்க தொகுதி எம்எல்ஏ.வா வரப்போறீங்க”

என்று அந்தப் பெண்ணும் அழைக்க வேறு வழியின்றி கங்கை அம்மன் கோயில் கூழ் ஊற்று விழாவில் வேணு கலந்து கொள்ள வேண்டியதாயிற்று. சாக்கடைகள் ஓடிக்கொண்டிருக்கும் அந்தப் பகுதியில் தான் காலைப் பார்த்து பார்த்து வைத்து நடந்து வந்தார். தன் கையில் இருந்த கைக் குட்டையை எடுத்து மூக்கைப் பிடித்துக் கொண்டார். உடன் வந்தவர்களுக்கு எல்லாம் ஒரு விதமான பயம் ஏற்பட்டது.

” என்ன இது? இந்தத் தெரு இப்படி இருக்கு?

” ஆமாய்யா இப்படித் தான் பல காலமா கெடக்கு. இதுக்கு முன்னாடி ஓட்டு வாங்கிட்டு போன ஆளுங்க எல்லாம் இப்படித்தான் இந்தத் தெருவை நல்லா ஆக்குறேன்னு சொல்லிட்டுப் போனாங்க . ஜெயிச்சாங்க. ஆனா யாரும் நல்லது செய்யல. சாக்கடை வசதி இல்ல. குடிநீர் வசதி இல்ல. ஒரு நூலகம் இல்ல .ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் இல்ல. குடிதண்ணீர் சரியா வர மாட்டேங்குது. கரண்ட் சரியா இல்ல. இப்படி அடிப்படை வசதிகள் கூட இல்லாம தான் நாங்க இங்க வாழ்ந்துட்டு இருக்காேம். இந்தத் தொகுதியை மேம்படுத்துறேன்னு போன தடவை ஓட்டு வாங்கிட்டு போன இந்த சட்டமன்ற உறுப்பினர் இந்த பக்கமே எட்டிப் பாக்குறது இல்ல. உங்கள கங்கை அம்மன் தான் கண்ணத் திறந்து இங்க கூப்பிட்டு இருக்காங்கன்னு நினைக்கிறேன்.

ஆமா என்று தலையாட்டினர் மக்கள்

இந்தப் பகுதி இப்படி இருக்கிறதுக்கும் நாங்க இந்த மாதிரி வாழ்க்கை வாழ்றதுக்கும் முன்னாடி ஓட்டு வாங்கிட்டு போன அரசியல்வாதிகள் தான் காரணம். நீங்க நல்லா செய்வீங்கன்னு நினைக்கிறோம். அதனால நம்பி உங்களுக்கு எங்க பகுதி மக்களை எல்லாம் ஓட்டுப் போடச் சொல்றோம் “

என்று அந்தப் பகுதியில் இருந்த முக்கியமான ஒருவர் சொல்ல

பம்பை, உடுக்கை, மேளம் முழங்க அந்த கூழ் ஊற்றும் திருவிழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார் வேணு.

“எங்களது தங்க மகன் வேணு ஐயா இந்தக் கூழைக் குடித்து இந்த கூழ் ஊற்றும் திருவிழாவைத் தொடங்கி வைப்பார் “

என்று ஒருவர் மைக்கில் பேச, ” அய்யய்யோ இது என்னடா வம்பாப் போச்சு. இவனுக இருக்கிற சுத்தத்துக்கு இத வேற குடிக்கணுமா? இதிலிருந்து தப்பிக்கிறது எப்படி? “

என்று யோசித்தார், வேணு

“சமத்துவ நாயகன், ஜாதி, மதம் பார்க்காதவர் எந்த இடத்திலும் தன்னுடைய பொருளாதாரத்தை முன்னிறுத்தாமல் மனிதர்களை மட்டுமே நினைத்து செயல்படும் எங்களது வருங்கால சட்டமன்ற உறுப்பினர் இப்போது, கங்கை அம்மன் கூழ் ஊற்றும் திருவிழாவை, முதன் முதலாய் கூழ் குடித்து ஆரம்பித்து வைப்பார்”

என்று ஒருவர் சொல்ல, மூக்கில் சளி வடிந்த ஒரு சிறுவன் ஒரு சொம்பில் தன் விரல்களை உள்ளே விட்டுக் கூழை எடுத்து வந்து வேணுவிடம் கொடுத்தான்.

” ஐயா, எங்கள் தொகுதியைக் காக்க வந்த தெய்வமே கூழ் குடிங்க “

என்று ஆட்கள் சொல்ல, சொம்பைக் கையில் வாங்கிய வேணுவுக்குக் குமட்டிக் கொண்டு வாந்தி வருவது போல இருந்தது.

” ஐயா நீங்க கூழ் குடிச்சா தான் இந்தத் திருவிழாவே ஆரம்பமாகும்”

என்று மேலும் சிலர் உசுப்பேற்ற வேறு வழியின்றி அந்தச் சிறுவன் கொடுத்த கூழை வாங்கிக் குமட்டக் குமட்ட வாயில் ஊற்றிக் கொண்டார்.

“ஐயா வேற வழி இல்ல. நீங்க கூழ் குடிச்சத் தான் ஆகணும் .அப்படி குடிச்சாத்தான் இந்தப் பகுதியில இருக்கிற ஐயாயிரம் ஓட்ட வாங்க முடியும். “

என்று உடன் வந்தவர்கள் சொல்ல, சிறுவன் கொடுத்த கூழை வாயில் ஊற்றினார், வேணு.

“எங்கள் சமத்துவப் பெரியவர், ஜாதி, மதம் பார்க்காதவர் ,எல்லா மனிதர்களையும் ஒன்றாக நினைக்கக்கூடிய வருங்கால சட்டமன்ற உறுப்பினர் வேணு ஐயா அவர்கள் கூழ் குடித்துவிட்டார். இனி கூழ் ஊற்றும் திருவிழா இனிதே ஆரம்பமாகிறது. எல்லோரும் அம்மன் அருள் வேண்டி கூழைக் குடித்து அம்மன் அருள் பெறலாம்”

என்று அங்கிருந்தவர்கள் சொல்ல, அத்தனை பேருக்கும் கூழ் பரிமாறப்பட்டது. ஒரு ஓரமாய் போய் வாந்தி எடுக்க ஆரம்பித்தார், வேணு

” ஐயாவுக்கு என்ன பிரச்சனை?”

என்று மக்கள் கேட்க

” அஞ்சு நாளா சரியா தூங்காம ராத்திரியும் பகலுமா பிரச்சாரம் பண்ணிக்கிட்டு இருக்காரு. அதுதான் உடம்புக்கு சேரல “

என்று ஒருவன் சப்பைக் கட்டு கட்ட

” கங்கை அம்மனாேட கூழ மறுபடியும் ஐயா குடிச்சாருன்னா சரியா போகும்னு நினைக்கிறேன்”?

என்று ஒருவர் சொல்ல, இதைக் கேட்டதும் அந்த இடத்தை விட்டுத் தலைதெறிக்க ஓடினார் ,வேணு.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *