செய்திகள்

கூட்டணி கட்சிகளை மு.க.ஸ்டாலின் விழுங்கிக்கொண்டு இருக்கிறார்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

Makkal Kural Official

கும்பகோணம், ஜூலை.22-

காங்கிரஸ் தேய்ந்து விட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்ணுக்கு தெரியவில்லை. கூட்டணி கட்சிகளை மு.க.ஸ்டாலின் விழுங்கிக் கொண்டு இருக்கிறார் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார பயணத்தில் நேற்று தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தொகுதியில் தனது பிரச்சாரத்தை அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டார்.

பிரசார பஸ்சில் நின்றபடி அவர் பேசியதாவது:-

தி.மு.க. கூட்டணி பலமான கூட்டணி. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறும் என ஸ்டாலின் கனவு கண்டு கொண்டு இருக்கிறார்.

நிஜத்தில் வெற்றி பெறுவது அண்ணா தி.மு.க. தலைமையிலான கூட்டணி தான். 210 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். தனிப்பெரும்பான்மையுடன் அண்ணா தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கும்.

ஒரே நேரத்தில் 20 ஆயிரம்

ஆசிரியர்களை நியமித்தோம்

வேண்டும் என்றே திட்டமிட்டு கல்விக்கு அ.தி.மு.க. ஒன்றும் செய்யவில்லை என்று கூறி ஒரு மாய தோற்றத்தை, பொய்யான தோற்றத்தை பொய் செய்திகளை வெளியிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியில்தான் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. புரட்சி தலைவி ஜெயலலிதா ஒரே நேரத்தில் 20 ஆயிரம் ஆசிரியர்களை நியமித்து சரித்திர சாதனை படைத்தார். ஒரே நாளில் பணி ஆணை வழங்கினார். இப்படி சரித்திரத்தை தி.மு.க. ஆட்சியில் செய்தார்களா?

இன்றைக்கு பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் செய்து கொண்டு இருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தர ஆசிரியர்களாக நியமிப்போம் என வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு, அவர்களது வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு நிரந்தரம் செய்யப்படாததால் போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.

பா.ஜ.க.வுடன் எடப்பாடி கூட்டணி வைத்துவிட்டார். பா.ஜ.க. விழுங்கிவிடும் என்கிறார். எடப்பாடி பழனிசாமி என்ன புழுவா? மீன் தின்பதற்கு. ஸ்டாலின் அவர்களே! நீங்கள் பல கட்சிகளை விழுங்கிக்கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் கூட்டணி கட்சிகளை எல்லாம் லபக்கு… லபக்கு… என்று விழுங்கிக்கொண்டு இருக்கிறீர்கள். அந்த கூட்டணி கட்சிகள் எல்லாம் காணாமல் போய்விடும்.

தி.மு.க. கூட்டணி கட்சிகள் எங்கே?

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் தேய்ந்து விட்டது. இருக்கிறதா? இல்லையா? என தெரியவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கிறதா? என்றால் கண்ணுக்கு தெரியவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏதேதோ காரணத்தை சொல்லி அதில் ஒட்டிக் கொண்டு இருக்கிறது. . இப்படிப்பட்ட நிலைமை தி.மு.க. கூட்டணியில் இருக்கிறது.

அண்ணா தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் அங்கம் வகிக்கும். எங்கள் கூட்டணி சரித்திர வெற்றி பெறும். அண்ணா தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். அ.தி.மு.க. கூட்டணி உடைந்துவிடும் என ஸ்டாலின் சொல்கிறார். ஒன்றும் உடையாது.

ஸ்டாலின் அவர்களே. எவ்வளவோ கனவு காண்கிறீர்கள். ஸ்டாலின் ஒரு பொம்மை முதலமைச்சர். அவரை விளையாட்டு பொம்மை போல் வைத்து ஆட்சி நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

தி.மு.க. ஒரு பச்சோந்தி. நிறம் மாறிக் கொண்டு இருக்கக்கூடிய கட்சி. இரட்டை வேடம் போடும் கட்சி. அவர்களுக்கு வேண்டும் என்றால் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி சேருவார்கள். பிடிக்கவில்லை என்றால் மற்றவர்கள் சேர்ந்தால் அது தப்பு என்பார்கள்.

அண்ணா தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி சேர்ந்ததுமே உங்களுக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. நடுங்குகிறீர்கள். பதறுகிறீர்கள். தி.மு.க.வுக்கு திருமாவளவன் அடிமையாகி விட்டார். இதை சொன்னால் அவருக்கு கோபம் வரும். அவர் நல்ல மனிதர்தான். ஆனால் சேராத இடத்தில் சேர்ந்து விட்டார். வரும் தேர்தல், தி.மு.க. ஆட்சிக்கு முடிவு செய்யும் தேர்தல்.

இவ்வாறு அவர் பேசினார்.

திருபுவனத்தில்

திருபுவனத்தில் நடந்த பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாது:-

திருவிடைமருதூர் பகுதி விவசாயிகளும், நெசவாளர்களும் நிறைந்த பகுதி. இந்த இரு தரப்பு மக்களும் அண்ணா தி.மு.க. ஆட்சியில் சிறப்பாக வாழ்ந்தனர். விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனை 2 முறை தள்ளுபடி செய்தது அண்ணா தி.மு.க. அரசுதான். தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெறுவதில் சிக்கல்கள் உள்ளதாக விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.

அண்ணா தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் சிக்கல் இல்லாமல் எளிமையாக கடன் பெற முடியும். அண்ணா தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள் பாதிக்கப்பட்டபோது ஓடோடி வந்து உதவிகளை செய்தோம். தி.மு.க. ஆட்சி வந்த பிறகு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து திட்டங்களும் நிறுத்தப்பட்டு விட்டன.

நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கினோம். பசுமை வீடுகள் கட்டி கொடுத்தோம். கைத்தறி ஆதரவு திட்டத்திற்கு ரூ.120 கோடி மானியம் வழங்கினோம். கைத்தறி துணிகள் நிறைய நெய்யப்பட்டு, விற்பனை ஆகாமல் தேங்கி இருந்தபோது மானியம் வழங்க நெசவாளர்கள் கோரிக்கை வைத்தார்கள்.

நெசவாளர்களுக்கு மீண்டும்

மானியம் வழங்குவோம்

அவர்களது கோரிக்கையை ஏற்று அந்த துணிகள் எல்லாம் விற்பனை ஆக ரூ.300 கோடி மானியம் கொடுத்தோம். இன்றைய ஆட்சியில் மானியம் நிறுத்தப்பட்டுவிட்டதாக நெசவாளர்கள் தெரிவித்தார்கள். அண்ணா தி.மு.க. ஆட்சி மலர்ந்தவுடன் நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் கட்டி தரப்படும். கைத்தறி நெசவாளர்களுக்கு மீண்டும் மானியம் வழங்கப்படும். அண்ணா தி.மு.க. அரசு நெசவாளர்களை வாழ வைக்கும் அரசாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *