ராய்ப்பூர், ஜூலை 10–
குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பது அபாயம் என எய்ம்ஸ் ஆய்வு முடிவுகள் எச்சரிக்கிறது.
5 வயதுக்குட்பட்ட இந்தியக் குழந்தைகள் தினமும் சராசரியாக 2.2 மணிநேரம் செல்போன், தொலைக்காட்சி, லேப்டாப் போன்ற திரைகளில் செலவிடுவதாக ராய்ப்பூர் எய்ம்ஸின் அதிர்ச்சி ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த திரைநேரம் உலகளாவிய வழிகாட்டுதல்களை விட 2 மடங்கு அதிகம் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
‘க்யூரஸ்’ இதழில் வெளியான இந்த ஆய்வு, 2,857 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட 10 ஆய்வுகளின் தரவுகளை பகுப்பாய்வு செய்துள்ளது. குறிப்பாக, 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தினமும் 1.2 மணிநேரம் திரைகளைப் பயன்படுத்துவது, இந்த வயதினருக்குத் திரைநேரம் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்ற உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் அமெரிக்க குழந்தைகள் மருத்துவ அகாடமி (AAP) பரிந்துரையை மீறுவதாகக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய கண்டுபிடிப்புகள்:
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 60-70% பேர் ஆரோக்கியமான அளவை விட அதிகமாக மொபைல் திரைகளைப் பயன்படுத்துகின்றனர். அதிகப்படியான திரைநேரம் குழந்தைகளின் மொழித் திறன், அறிவாற்றல் வளர்ச்சி, சமூகத் தொடர்புகள், உடல் பருமன், தூக்கமின்மை மற்றும் கவனக்குறைவு போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் பாதித்து, குறிப்பாக மொழி புரிதல் மற்றும் உரையாடல் திறன்களைக் குறைக்கிறது.
குழந்தைகளை அமைதிப்படுத்தவோ அல்லது உணவு உண்ண வைக்கவோ திரைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் சொந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் திரைநேரத்தைக் குறைத்து, குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு, விளையாடுவது மற்றும் புத்தகங்கள் படிப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும்.
எய்ம்ஸ் ராய்ப்பூரின் இந்த ஆய்வு, குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு மொபைல் திரைநேரத்தைக் குறைப்பதும், பெற்றோர்-குழந்தை தொடர்பை மேம்படுத்துவதும் அவசியம் என்று வலியுறுத்துகிறது. இது கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
![]()





