சென்னை, டிச. 21–
குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக டாக்டர் மீது மருத்துவக் கல்லூரி மாணவி புகார் கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்.சி. பிசியோதெரபி படித்து வருகிறார். 4-ம் ஆண்டு மாணவியான இவர் பெரம்பூரில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் பயிற்சி பெற்று வந்தார். அந்த ஆஸ்பத்திரியில் ரூ.4 ஆயிரம் சம்பளத்துடன் பயிற்சி பெற்ற மாணவி அந்த ஆஸ்பத்திரியின் உரிமையாளரான டாக்டர் ஒருவர் மீது தான் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி இருக்கிறார்.
இது தொடர்பாக மாணவி அளித்துள்ள புகாரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்பத்திரி உரிமையாளரான டாக்டர் எனக்கு காலை 6.30 மணிக்கு போன் செய்து நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளது. நேரில் வா என்று கூறினார். இதைத் தொடர்ந்து பகல் 1 மணி அளவில் நான் ஆஸ்பத்திரிக்கு சென்றேன். இதன் பிறகு டாக்டர் தனது காரில் பெண் ஒருவருக்கு மசாஜ் செய்ய வேண்டி உள்ளது என என்னிடம் தெரிவித்தார்.
இதை நம்பி நான் அவருடன் கொளத்தூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு காரில் சென்றேன். அப்போது டாக்டர் என்னிடம் நீ, காபி, டீ எதுவும் சாப்பிடுகிறாயா? என்று கேட்டார். நான் அந்த பழக்கம் இல்லை என்று கூறினேன். இதையடுத்து காரில் இருந்த குளிர்பானத்தை எனக்கு கொடுத்தார். அதனை குடித்ததும் நான் மயக்கம் ஆகிவிட்டேன்.
அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு அறைக்குள் சென்ற பிறகு எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. நீண்ட நேரம் கழித்து கண்விழித்து பார்த்தபோது எனது உடலில் ஆடைகள் எதுவும் இல்லை. என்னை காரில் அழைத்து சென்ற டாக்டரும் ஆடை எதுவும் இன்றி படுக்கையில் எனது அருகில் படுத்து இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் அவரை தள்ளி விட்டு விட்டு உடைகளை அணிந்துக் கொண்டு அங்கிருந்து வீட்டுக்கு வந்து விட்டேன். பயந்து போய் யாரிடமும் சொல்லாமல் இருந்தேன்.
பின்னர் இதுபற்றி எனது அக்காவிடம் கூறினேன். எனது உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டரிடமும், அவரது மனைவியிடமும் இதுபற்றி கேட்டு சண்டை போட்டனர். என்னிடம் தவறாக நடந்து கொண்ட டாக்டர் தற்போது அது போன்று எதுவும் நடக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்து வருகிறார். எனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து என்னுடன் தகாத உறவில் ஈடுபட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
மருத்துவ மாணவி முதலில் இந்த புகார் மனுவை செம்பியம் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ளார். அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் கொளத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து மகளிர் போலீசார் மாணவி அளித்த புகார் மீது விசாரணை நடத்தி வருகிறார்கள். மருத்துவ மாணவி புகாரில் கூறி இருப்பது பற்றிய தகவல்கள் தொடர்பாக கூடுதல் விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து பாலியல் அத்துமீறல் சம்பவம் அரங்கேறி இருப்பதாக மாணவி தெரிவித்து இருக்கும் நிலையில் சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
![]()





