சென்னை, ஜூலை 17–
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்நிறுவனங்கள் துறையின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மூலம் அண்ணாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் குறு, சிறு தொழில்நிறுவனத் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்து கொண்டு மாணவர்களின் 65 புதிய கண்டுபிடிப்புகளுக்கு ரூ.40.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கினார்.
விழாவில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசியதாவது:–-
“இன்று இந்த கண்காட்சியில் நம் மாணவர்களின் புதிய கண்டுப்பிடிப்புக்களான ரோபோ ரோடு ரோலர், பல்நோக்கு விவசாய கருவி, கப்பல் ஊழியர்களுக்கான பாதுகாப்பு பெல்ட், Sound Gun, அன்னாச்சி பழம் அறுவடை கருவி, மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் என பல்வேறு கண்டுபிடிப்புகள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.
9.69% பொருளாதார
வளர்ச்சி
தமிழ்நாடு இன்று இந்திய அளவில் அதிக தொழில் முதலீடுகளை ஈர்த்த மாநிலங்களில் முதல் மாநிலமாக உள்ளது. பொருளாதார வளர்ச்சியில் 9.69 சதவீதம் பெற்று முதலிடத்தில் உள்ளது. புத்தாக்கத் தொழில்கள் தர வரிசையில் முதல் இடத்தில் உள்ளது. புத்தாக்க சிந்தனைக் கொண்ட நம் இளைஞர்கள் – மாணவர்களுக்கு EDII நிறுவனம் மூலம் மாவட்ட தலைநகரங்கள், கல்லூரிகள், பள்ளிகள், வட்டார அளவிலும் தொழில் முனைவு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
கழக அரசு பொறுப்பேற்ற 4 ஆண்டு காலத்தில் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 71 ஆயிரத்து 735 நபர்களுக்கு தொழில்முனைவு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு 19 ஆயிரம் நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களில் அடுத்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் மாணவர்களை தொழில் முனைவோர்களை உருவாக்கிட “நிமிர்ந்து நில்” என்ற திட்டம் ரூ.19 கோடியே 57 லட்சம் செலவில் நடப்பாண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
2ஜி முதல் 5ஜி வரை…
2ஜி, 3ஜி, 5ஜி என உலகம் வேகமாக முன்னேறி கொண்டிருக்கும் காலத்தில் நம் மாணவர்களும் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து மக்களின் தேவையினை புரிந்து தரமான பொருட்களை – குறைந்த விலையில் உருவாக்கிட வேண்டும் என கேட்டுக் கொண்டு, உங்களுக்கு தேவையான ஆலோசனைகள் பயிற்சிகள் நிதி உதவிகள் வழங்க அரசு தயாராக உள்ளது. உங்கள் புதிய கண்டுபிடிப்புகளால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு உருதுணையாக இருந்து தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லுங்கள்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
கண்காட்சி பார்வை
நிகழ்ச்சிக்கு முன் மாணவ மாணவியர்களின் புதிக கண்டுப்பிடிப்புக்களின் கண்காட்சியினை அமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் அரசு துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல் ஆனந்த், இயக்குநர், இரா.அம்பலவாணன், சர்வதேச குழந்தைகள் நிதியத்தின் மாயாவாசுதேவன், துணை இயக்குநர் கமலக்கண்ணன் மற்றும் புதிய கண்டுபிடிப்பாளர்கள், தொழில்முனைவோர்கள், மாணவ மாணவியர்கள் ஆசிரிய பெருமக்கள் கலந்துக் கொண்டனர்.
![]()





