சென்னை, செப்.29-–
குரூப்-–2, 2ஏ முதல்நிலைத் தேர்வை எழுத 5 லட்சத்து 53 ஆயிரத்து 634 பேர் விண்ணப்பித்த நிலையில், 75.64 சதவீதம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் தெரிவித்தார்.
உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை–-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் ஆகிய குரூப்–-2 பதவிகளில் 50 காலிப் பணியிடங்களும், முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், மேற்பார்வையாளர், உதவியாளர் நிலை-–3, உதவியாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், செயல் அலுவலர் நிலை-3, கீழ்நிலை செயலிட எழுத்தர் ஆகிய குரூப்-2ஏ பதவிகளில் 595 இடங்களும் என மொத்தம் 645 இடங்கள் தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஜூலை மாதம் 15-ந்தேதி அறிவித்தது.
இந்த பணியிடங்களுக்கு 2 லட்சத்து 12 ஆயிரத்து 495 ஆண்களும், 3 லட்சத்து 41 ஆயிரத்து 114 பெண்களும், 25 திருநங்கைகளும் என மொத்தம் 5 லட்சத்து 53 ஆயிரத்து 634 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான தேர்வு நேற்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. காலை 9 மணிக்குள் வந்த தேர்வர்கள் மட்டுமே தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். தேர்வு காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடந்து முடிந்தது.
தேர்வை பொறுத்தவரையில், சற்று கடினமாக இருந்ததாகவே தேர்வர்கள் தெரிவித்தனர். நடப்பாண்டில் நடத்தி முடிக்கப்பட்ட குரூப்-4 தேர்வு வினாத்தாள் கடினமாக கேட்கப்பட்டது. அந்த வினாத்தாளை காட்டிலும், குரூப்-2, 2ஏ முதல்நிலை தேர்வு வினாத்தாள் பரவாயில்லை என தேர்வர்கள் தெரிவித்தனர்.
தமிழ், திறனறிவு மற்றும் கணித வினாத்தாள் பகுதி சற்று எளிதாக கேட்கப்பட்டிருந்ததாகவும், பொது அறிவு வினாத்தாள் பகுதியில் புதிய வினாக்களே அதிகம் கேட்கப்பட்டிருந்ததாகவும், வரலாறு, அரசியலமைப்பு பிரிவில் எளிதாகவும், அறிவியல், பொருளாதார பிரிவில் கடினமாகவும் வினாக்கள் அமைந்திருந்ததாகவும் பெரும்பாலான தேர்வர்கள் தெரிவித்தனர்.
200 வினாக்களில் 150 வினாக்களுக்கு சரியாக பதிலளித்து இருந்தால் அடுத்தகட்டமாக நடக்கக் கூடிய முதன்மைத் தேர்வுக்கு தாராளமாக தயாராகலாம் என்றும் தேர்வுக்கான பயிற்சியாளர்கள் கூறினர்.
வினாத்தாளில் சமூக நீதி, மகளிர் உரிமைத் தொகை போன்ற அரசின் குரலாக இருக்கக்கூடிய சில வினாக்களும் இடம்பெற்றுள்ளன.
தேர்வை எழுத விண்ணப்பித்த 5 லட்சத்து 53 ஆயிரத்து 634 பேரில், 4 லட்சத்து 18 ஆயிரத்து 791 பேர் தேர்வை எழுதி இருக்கின்றனர். 1 லட்சத்து 34 ஆயிரத்து 843 பேர் எழுத வரவில்லை.
அதாவது விண்ணப்பித்தவர்களில் 75.64 சதவீதம் பேர் தேர்வை எழுதி உள்ளனர். 645 குரூப்-2, 2ஏ காலிப் பணியிடங்களுக்கு 4 லட்சத்து 18 ஆயிரத்து 791 பேர் போட்டியிடுகிறார்கள். ஒரு இடத்துக்கு மட்டும் 650 பேர் களத்தில் நிற்கிறார்கள்.
டிசம்பரில் முடிவுகள்
இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும் என்றும், முதன்மைத் தேர்வுகள் அடுத்தாண்டு மார்ச் மாதம் நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்தார்.
![]()





