கும்மிடிப்பூண்டி, ஜூலை 26–
கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 12 நாட்களாய் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வந்த மேற்கு வங்காள இளைஞன், சூளூர்ப்பேட்டை ரெயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டான்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த 12 ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து, ஆரம்பாக்கம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர். இதற்காக திருவள்ளூர் எஸ்.பி விவேகானந்தா சுக்லாவின் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட தனிப்படைகள் மற்றும் சிறப்பு குழுக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வந்தது.
அந்த வகையில், தனிப்படைகள் மற்றும் சிறப்பு குழுக்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்த்தப்பட்டது. குற்றவாளி பற்றி பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்தனர். தமிழகப் பகுதிகள் மட்டுமல்லாமல், ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட பிற மாநில பகுதிகளிலும் குற்றவாளியை ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் தீவிரமாக தேடி வந்தனர்.
குற்றவாளியை 12 நாட்களுக்கு மேலாக தேடி வந்த தனிப்படை போலீசார், நேற்று மாலை ஆந்திர மாநிலம், சூளூர்பேட்டை ரயில் நிலையத்தில் நின்ற மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவனை, சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த இளைஞன் புகைப்படத்தை, பாலியல் வன்கொடுமைக்குள்ளான சிறுமியிடம் போலீஸார் காட்டியபோது, அந்தச் சிறுமி, தன்னை பாலியல் வன்கொடுமை செய்தவன் இவன்தான் எனச் சொன்னதாக தெரிகிறது.
இதைத் தொடர்ந்து அவனை போலீசார் கைது செய்தனர். குற்றவாளி கவரப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்ட நிலையில், அங்கு வந்த வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், தனிப்பட்ட முறையில், அந்த நபரிடம் விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் கவரப்பேட்டை காவல் நிலையத்தில் பலத்த போலீசார் பாதுகாப்புடன் கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ஜெயஸ்ரீ உள்ளிட்ட மூன்று டிஎஸ்பி தலைமையில் குற்றவாளியிடம் இரண்டாம் கட்ட விசாரணை நடைபெற்று வருகின்றது. குற்றம் நடந்த மாந்தோப்புக்கு அவனை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதன் பின்னர் அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
![]()





