எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்
சென்னை, டிச. 19:
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 700 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கைது செய்யப்பட்டனர்.
திமுக அரசு தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதியின்படி தங்களின் பணிகளை நிரந்தரப்படுத்த வேண்டும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் மீதான மேல்முறையீட்டை கைவிட்டு, செவிலியர்களுக்கு வேலைக்கான ஊதியம் வழங்க வேண்டும் என்றும், செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 3 பணியிடங்களை மீண்டும் உருவாக்கிட வேண்டும் என்றும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணி செய்து, பின்னர் பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றும், பட்டப்படிப்பு மற்றும் பட்டம் மேற்படிப்பு முடித்த செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் எனவும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். மாலை 6 மணி ஆனதை தொடர்ந்து செவிலியர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் செவிலியர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், கிளாம்பாக்கம் அருகே பேருந்தில் அழைத்து சென்று விடுவித்தனர்.
பேருந்து நிலையத்தின் ப்ளாட்பார்மில் கூடிய 700 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இரவு முழுவதும் அங்கே அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். அதிகாலை 4 மணியளவில் காவல்துறையினர் அவர்களை கைது செய்து ஊரப்பாக்கத்திலுள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
சிவானந்தம் சாலையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் செய்த போது அவர்களின் பிரதிநிதிகளை அழைத்து சுகாதாரத்துறைச் செயலாளர் பி.செந்தில்குமார் பேசினார். இதில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
எடப்பாடி பழனிசாமி
கண்டனம்
கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
திமுக ஸ்டாலின் அரசு, 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது செவிலியர்களுக்கு அளித்த வாக்குறுதி எண் 356-ஐ நிறைவேற்றக்கோரியும், அதிமுக அரசால் கொரோனா காலகட்டத்தில் பணியமர்த்தப்பட்டு, தற்போதைய திமுக அரசால் பணிநீக்கம் செய்யப்பட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு செவிலியிர்கள் மேம்பாடு சங்கத்தின் சார்பாக அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை சிவானாந்தா சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான செவிலியர்கள் கலந்து கொண்டனர். நேற்று இரவு 7.30 மணிக்கு காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சுமார் 1,000-க்கும் மேற்பட்ட செவிலியர்களை கைது செய்து அவர்களை பேருந்துகள் மூலமாக அழைத்துச் சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டனர். இறக்கிவிடப்பட்ட செவிலியர்கள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலேயே தங்களது கோரிக்கைகள் நிறைவேறாமல் கலையமாட்டோம் எனக்கூறி திமுக அரசுக்கு எதிரான கோஷங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, திமுக அரசின் காவல்துறை அவர்களை மீண்டும் கைதுசெய்து அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
2021 சட்டமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி கடந்த நான்கரை ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களை உடனடியாக விடுவிப்பதுடன், 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக, Failure மாடல் ஸ்டாலின் அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
திமுக அரசின் இந்த அராஜகப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன். திமுக தனது தேர்தல் அறிக்கை வாக்குறுதி எண் 356 ல், தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மருத்துவர்களும், செவிலியர்களும், பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று கூறியிருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து ஐந்தாவது ஆண்டு முடியப் போகும் நேரத்திலும், இந்த வாக்குறுதியை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. செவிலியர்கள் கேட்பது, ஆட்சிக்கு வருவதற்காக திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத்தான். அவர்களை தலைமைச்செயலகத்தில் சந்தித்து, அவர்கள் கோரிக்கைகளை கேட்டுக்கொள்ளும் அடிப்படை மரியாதையைக் கூட, சுகாதாரத்துறை அமைச்சர் கொடுக்க மறுக்கிறார் என்பது, பொதுமக்களை திமுக எப்படி நடத்துகிறது என்பதற்கு உதாரணம். ஏற்கனவே, கடந்த 2023 ஆம் ஆண்டு, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 2,472 செவிலியர்களைப் பணிநீக்கம் செய்ததை நாம் கண்டித்துக் குரல் கொடுத்திருந்தோம். தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற செவிலியர்களின் கோரிக்கைக்கு எப்போதும் துணை நிற்போம். செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()





