செய்திகள்

கிறிஸ்துமஸ், பள்ளி விடுமுறை எதிரொலி ஆம்னி பஸ் கட்டணம் பலமடங்கு உயர்வு

Makkal Kural Official

சென்னை, டிச. 22:

கிறிஸ்துமஸ், பள்ளி விடுமுறையை முன்னிட்டு, தமிழகத்தில் ஆம்னி பஸ்களின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

டிசம்பர் மாத இறுதியில் வரும் பள்ளி அரையாண்டு தொடர் விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு, சென்னையில் இருந்து மதுரை, கோவை, சேலம், திருச்சி, நெல்லை மற்றும் நாகர்கோவில் போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ் கட்டணம் வழக்கத்தை விட 2 முதல் 3 மடங்கு வரை அதிகரித்துள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25-ந்தேதி கொண்டாடப்படும் நிலையில், சென்னையில் இருந்து நாளை இரவே பெரும்பாலானவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்வார்கள். சாதாரண நாட்களில் நெல்லை, நாகர்கோவில், கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு சென்னையில் இருந்து செல்ல ரூ.800 முதல் ரூ.1,200 வரை கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் தற்போது பல மடங்கு அதிகரித்து உள்ளதால் நடுத்தர வர்க்கத்தினர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சென்னையில் இருந்து கோவை செல்வதற்கு ஆம்னி பஸ்களில் ரூ.4 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நெல்லை மற்றும் நாகர்கோவில் நகரங்களுக்கு செல்ல ரூ.4 ஆயிரத்து 500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தூத்துக்குடிக்கு செல்ல ரூ.4 ஆயிரத்து 300 வசூலிக்கப்படுகிறது. மதுரைக்கு செல்ல ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.3 ஆயிரத்து 300 வரை வசூலிக்கப்படுகிறது.

சேலத்திற்கு செல்ல ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. இது குறித்து போக்குவரத்துத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஆம்னி பஸ்களின் கட்டண உயர்வைச் சமாளிக்கவும், பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கவும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ரெயில்களில் ஏற்கனவே இடங்கள் நிரம்பிவிட்ட நிலையில், பயணிகள் அரசுப் பஸ்களில் பயணிக்க முன்னுரிமை அளித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *