சென்னை, டிச. 25:
தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கிறிஸ்துமஸ் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்தவ தேவாலயங்கள் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கின்றன. ஸ்டார்கள் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளன. தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றதால் அதில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர். தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கரைபுரண்டது. மக்கள் ஒருவொருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சென்னையில் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரவு முழுக்க கூடுதல் ரோந்து பணிகளில் போலீசார் ஈடுபட உள்ளனர்.
சென்னை சாந்தோமில் அமைந்திருக்கும் வரலாற்று சிறப்புமிக்க புனித தோமையார் தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை நடைபெற்றது. ஆயிரக்கனக்கான கிறிஸ்தவ மக்கள் புத்தாடை அணிந்து குடும்பத்துடன் பங்கேற்று உலக மக்களின் நன்மைக்காக பிரார்த்தனை செய்தனர்.மேலும், ஒருவருக்கொருவர் கைகுலுக்கி தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். மேலும் குறிப்பாக சென்னை சாந்தோம் புனித தோமையார் தேசிய தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி 25 அடி உயர கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டிருந்தது. பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. தொடர்ந்து கிறிஸ்துமஸ் கேக் வெட்டி பகிர்ந்தளிக்கப்பட்டது .சமய வேறுபாடுகளைக் கடந்து கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுவதாக பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தெரிவித்தார்
இதே போல் சென்னை மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி பேராலயத்தில் அருட்தந்தை தீபக் அந்தோணி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
வேளாங்கண்ணி
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் இன்று விடியற்காலை நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். வேளாங்கண்ணி விடியற்காலை விண்மீன் ஆலயத்தில் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலியினை பேராலய அதிபர் இருதயராஜ் நிறைவேற்றினார். அதனைத்தொடர்ந்து பங்கு தந்தை அற்புதராஜ் மற்றும் உதவி பங்கு தந்தைகள் திருபூஜகளை நடத்தினர். அந்த திருப்பலிகள் நிறைவில் ஏசு பிறப்பை அறிவிக்கும் வகையில் குழந்தை ஏசு சொரூபத்தை பக்தர்களுக்கு காண்பிக்கப்பட்டது. பின்னர் ஏசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டு, குடிலில் பிறந்த குழந்தை ஏசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர்.
இதே போல் தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலங்களில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக நடைபெற்றது.
![]()





