செய்திகள்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: சென்னையில் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

Makkal Kural Official

சென்னை, டிச. 24–

கிறிஸ்துமஸ் பண்டிகையை பொதுமக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாடுவதற்கு 8 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும், நலனுக்காகவும் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் தேவாலயங்களுக்கு செல்வதால், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் பாதுகாப்பிற்க்காகவும், கூட்ட நெரிசல் ஏற்படாத வண்ணமும், இன்று இரவு முதல் நாளை வரை, சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் வழிகாட்டுதலின்பேரில் இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் என 8,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், காவல்துறை பணிக்கு உதவியாக, ஊர்க்காவல் படையினரும் கூடுதலாக சேர்க்கப்பட உள்ளனர்.

சென்னையிலுள்ள சுமார் 350 தேவாலயங்களுக்கு சுழற்சி முறையில் காவல் அதிகாரிகள் தலைமையிலான காவல் குழுவினர் மூலம் கண்காணிக்கவும், சீரான போக்குவரத்து பராமரிக்கவும், விரிவான பாதுகாப்பு பணிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மயிலாப்பூர் சாந்தோம் தேவாலயம், பெசன்ட்நகர் வேளாங்கண்ணி தேவாலயம், பாரிமுனை அந்தோணியார் தேவாலயம், அண்ணாசாலை புனித ஜார்ஜ் (கத்தீட்ரல்), தேவாலயம், சைதாப்பேட்டை சின்னமலை தேவாலயம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகளவு கூடும் தேவாலயங்களுக்கு கூடுதலாக சட்டம்&ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து காவல் ஆளிநர்கள் நியமிக்கப்பட்டு, பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீர்படுத்தும் பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மெரினா, சாந்தோம், பெசன்ட்நகர், நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரைகளுக்கு செல்லும் பொதுமக்களை கடலில் இறங்காத வண்ணம் தடுக்கவும், அறிவுரைகள் வழங்கவும், All Terrain Vehicle (ATV) மூலம் கண்காணித்து, பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மூலம் சீரான போக்குவரத்து மற்றும் தேவாலயங்களின் அருகில் வாகன நிறுத்துமிடங்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை பொதுமக்கள் அமைதியாகவும், சிறப்பாகவும், பாதுகாப்பாகவும், கொண்டாட சென்னை பெருநகர காவல்துறை மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுவதுடன், பொதுமக்கள் காவல்துறையின் அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை கடைபிடித்து மகிழ்ச்சியாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *