நூக், ஜன. 18–
கிரீன்லாந்து மக்களுக்கு உறுதுணையாக இருப்போம் என ஐரோப்பிய ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.
கிரீன்லாந்து தனக்கு வேண்டும் என டிரம்ப் கூறி வருகிறார். இதனை எதிர்க்கும் நாடுகளுக்கு நான் வரி விதிப்பேன் என டிரம்ப் மிரட்டலாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் ஐரோப்பிய ஆணைய தலைவர் ஊர்சுலா வான்டர் லெயன் பேசும்போது, வரி விதிப்புகள் அட்லாண்டிக் பெருங்கடல் நாடுகளின் உறவுகளில் பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன், நிலைமையை சீர்குலைய செய்து விடும் ஆபத்தும் உள்ளது. நாங்கள் டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து மக்களுக்கு முழு அளவில் தொடர்ந்து உறுதுணையாக இருப்போம். பேச்சுவார்த்தையே எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்தது. டென்மார்க்கிற்கும், அமெரிக்காவுக்கும் இடையே நல்ல உறவுமுறை நீடிப்பதற்கான முயற்சிகளை கடந்த வாரமே நாங்கள் தொடங்கி விட்டோம். கிரீன்லாந்தின் இறையாண்மையை பாதுகாக்க ஐரோப்பா தொடர்ந்து ஒற்றுமையாக, ஒருங்கிணைந்து செயல்படும் என கூறினார். இதனை முன்னிட்டு, இன்று அவசரகால கூட்டம் ஒன்றை நடத்தவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
பேரணி, எதிர்ப்பு
இந்நிலையில், டிரம்பின் முயற்சிக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி கிரீன்லாந்தில் பேரணி நடத்தினர். ஆர்டிக் தீவில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டனர். கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை என்று எழுதப்பட்ட பதாகைகளை அவர்கள் கையில் ஏந்தியிருந்தனர்.
அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு நடந்து சென்ற போராட்டக்காரர்கள் வழி நெடுகிலும் கோஷங்களை எழுப்பியபடி சென்றனர். கிரீன்லாந்தின் பிற நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ் பிரடெரிக் நீல்சன் நூக்கில் நடந்த அணிவகுப்பில் கலந்து கொண்டார்.
![]()





