சென்னை, ஆக.10-
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஆஸ்பத்திரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவ பயனாளிகளுக்கு காலதாமதம் இன்றி சிகிச்சை அளிக்க டாக்டர்களை அவர் அறிவுறுத்தினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தாம்பரம் பகுதியில் நடந்த விழாவில் பங்கேற்றார். விழா முடிந்து வீட்டுக்கு செல்லும் வழியில் சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ஆஸ்பத்திரியில் உள்ள அவசர சிகிச்சைப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு சென்று ஆய்வு செய்தார். ரத்தம், சளி, சிறுநீர், சதை பரிசோதனை உள்ளிட்ட அனைத்து விதமான பரிசோதனைகளையும் ஒரே இடத்தில் மேற்கொள்ளும் உயர்தர மத்திய ஆய்வகத்தை பார்வையிட்டார்.
அப்போது, 121 புற நோயாளிகள், 326 உள் மருத்துவ நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும், மத்திய ஆய்வகத்தில் இதுவரை 2,390 பல்வேறு வகையான பரிசோதனைகள் நடைபெற்றுள்ளதாகவும் ஆஸ்பத்திரி இயக்குனர் பார்த்தசாரதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, ஆஸ்பத்திரி யில் கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த மருத்துவ பயனாளியிடம் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்கள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார். அதற்கு, ஆஸ்பத்திரியில் சிகிச்சை நல்ல முறையில் வழங்கப்பட்டு வருவதாக வும், நன்றாக கவனித்துக்கொள்வ தாகவும் பயனாளி தெரிவித்தார்.
பின்னர், மருத்துவ பணியாளர்களின் வருகைப் பதிவேடு, உள் மற்றும் புற மருத்துவ பயனாளிகளின் சிகிச்சை விவர பதிவேடுகள், மருந்துகள் இருப்பு ஆகியவற்றை முதலமைச்சர் பார்வையிட்டு அதன் விவரங்களை கேட்டறிந்தார்.
அப்போது, ஆஸ்பத்திரியை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நபர்களுக்கு தேவையான சிகிச்சைகளை காலதாமதம் இன்றி வழங்க வேண்டும். அத்தியாவசிய மருந்துகள் தேவையான அளவுக்கு இருப்பு வைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பாலு எம்.பி., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
![]()





