பெங்களூர், டிச. 17–
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை மாற்றும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மக்களவையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு மாற்றாக ‘வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு’ சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம், பெலகாவி சட்டசபை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தலைமையில் அக்கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நேஷனல் ஹெரால்டு வழக்கு மற்றும் 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்றத்தைக் கண்டிக்கும் பதாகைகள் மற்றும் மகாத்மா காந்தியின் புகைப்படங்களை ஏந்தியவாறு அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
போராட்டம் குறித்துப் பேசிய தொழில்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல், ‘‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் என்பது அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி ஆகியோரால் தொடங்கப்பட்டது. மாபெரும் வெற்றியைப் பெற்ற ஒரு திட்டம் இது. வேலை தேடி வெளியே செல்ல முடியாதவர்களுக்கு உள்ளூரிலேயே வேலை வழங்கும் திட்டம் இது. இந்த திட்டத்தால் கிராமப்புறங்களில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்த திட்டம் நமது நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த மகாத்மா காந்தியின் பெயரில் உள்ளது. அவ்வாறு இருக்க காந்தியின் பெயரை ஏன் நீக்க வேண்டும்? இந்திய வரலாற்றிலேயே மிகவும் வெற்றி பெற்ற திட்டமாக இது இருப்பதால், இதனை பாஜகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றார்.
ஆர்ப்பாட்டத்துக்கு முன்னதாக செய்தியாளர்களுடன் பேசிய சிவக்குமார், “நேஷனல் ஹெரால்டு என்பது சுதந்திரப் போராட்டத்தின் போது ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட, நாட்டின் பெருமைக்குரிய ஒரு பத்திரிகை. நான் ஒரே ஒரு கேள்விதான் கேட்கிறேன், அமலாக்கத்துறை ஏன் இன்னும் எனக்கு முதல் தகவல் அறிக்கை நகலை வழங்கவில்லை? இன்று அமலாக்க இயக்குநரகத்தின் நற்பெயர் களங்கப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.
![]()





