செய்திகள்

காதலிக்க மறுத்ததால் 12ம் வகுப்பு மாணவி வெட்டிக் கொலை

Makkal Kural Official

ராமநாதபுரம், நவ. 19

காதலிக்க மறுத்த 12 ஆம் வகுப்பு மாணவியை இன்று இளைஞர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் ராமேஸ்வரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம், சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், கவிதா தம்பதியின் மகள் ஷாலினி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்த குப்புசாமி, முத்துமாரி தம்பதியின் மகன் முனிராஜ் (20) என்பவர் அந்த பெண்ணை கடந்த ஒரு வருடமாக ஒருதலைபட்சமாக காதலித்ததாகவும், இதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

பள்ளிக்கு சென்றபோது…

இன்று காலையில் மாணவி ஷாலினி வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை பின் தொடர்ந்து வந்த முனிராஜ் மீண்டும் காதலிப்பதாக கூறியுள்ளார். அந்த மாணவி காதலை ஏற்க மறுத்துள்ளார். எனினும் முனிராஜ் பின்தொடர்ந்து சென்றுள்ளார். மாணவி ஷாலினி தப்பி செல்ல முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முனிராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மாணவி மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைத் தொடர்ந்து முனிராஜ் அங்கிருந்து தப்பி ஓடினார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவி ஷாலினி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மாணவி இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தப்பி ஓடிய முனிராஜ் அருகில் இருந்த ராமேஸ்வரம் நகர் காவல்நிலையத்திற்கு நேரடியாக சென்று சரணடைந்துள்ளார். மேலும், தன்னை காதலிக்க மறுத்ததால் மாணவியை கொலை செய்துவிட்டதாக காவல்நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர், முனிராஜை ராமநாதபுரம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்து சென்றுள்ளனர்.

ராமேஸ்வரத்தில் பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அந்த மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாணவியின் உடலை வாங்க மறுத்து மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கைதான இளைஞரை தங்களிடம் ஒப்படைக்க கோரி இந்த மறியலில் ஈடுபட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *